பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் அழுத்தப் போராட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம்

பிரதமரின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உறுதியளிக்கப்பட்டதின்படி ஒருவருடம் கடந்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாததால் அதிபர், ஆசியர்களை உள்ளடக்கிய 5 தொழிற்சங்கங்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு முன்னால் அழுத்தப் போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச்செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஞாயிறன்று 10.06.2018 தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களாக 2009இல் இருந்து நியமனம் பெற்றவர்களின் பிரச்சினைகள் தொடந்தவண்ணமே உள்ளதால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக புதன்கிழமை 13.06.2018 காலை 10 மணிக்கு இந்த அழுத்தப் போராட்டம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இது விடயமாக இலங்கை ஆசிரிய – அதிபர்களின் தொழிற்சங்க ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது@

ஆசிரிய – அதிபர்களின் தொழிற்சங்க ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுதந்திர கல்விச் சேவைகள் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், பொது ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து பாடசாலை அதிபர்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தும் அழுத்தப் போராட்டமொன்றை நடாத்தவுள்ளது.

• 2009இல் அதிபர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு,

• 2010.02.01இல் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு இன்று வரை கிடைக்காத பதவி உயர்வுகள்,

• அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் 800 வரையிலான ஆசிரியர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்கத் தீர்மானித்துள்ளமை,

•ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு இணைந்தவர்களுக்கு சம்பளக் குறைப்பிற்கான நிரந்தரத் தீர்வின்மை,

• 2016.05.09இல் நியமனம் பெற்ற அதிபர் சேவையில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமை,

• இணைந்த மொழி, இரண்டாம் மொழி தொடர்பான தெளிவான தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை,

• பதவி நிலை உத்தியோகத்தர் சேவையாக அதிபர் சேவை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களுக்கு உரித்தான வரப்பிரசாதங்கள் வழங்கப்படாமை,

• இலங்கை கல்வி நிர்வாக விசேட ஆளணி வெற்றிடங்களுக்கு அதிபர்கள் நியமிக்கப்படாமை,

• கடமை நிறைவேற்று அதிபர்கள் தற்போது சேவையில் நீடிக்கின்றமை,

• அதிபர்கள் மீது தொடர்ச்சியான அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை,

• அதிபர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை தொடர்ச்சியாக நடத்தப்படாமை,

• அதிபர்களின் பதவி உயர்வுக்கான முகாமைத்துவ பாடநெறிகளுக்கு சகல அதிபர்களும் பின்பற்றக் கூடியவாறு வாய்ப்பினை ஏற்படுத்தி தராததும், அதற்கான கட்டுப் பணம் அதிகமாக வசூலிக்கப்படுகின்றமை

• 353 தேசிய பாடசாலைகளில் 260 பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை காணப்பட்டபோதும் அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் எடுக்காமை என

மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்துவதன் பொருட்டே இந்த அழுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இது விடயமாக கடந்த வருடம் 2017 மே 4ஆம் திகதி விஹாரமாதேவி திறந்தவெளி அரங்கில் அதிபர்களுக்கான மாநாடு நடைபெற்றதுடன், அதன் பின்னர் பிரதமர் காரியாலயம் வரை சென்று பிரதமரின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். பிரதமர் காரியாலயம் உரிய காலத்தில் தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தது. எனினும் இன்று வரை தீர்வுகள் எட்டப்படவில்லை.” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]