பிக்குவிடம் கைவரிசையை காட்டியவர் கைது

போலி ஆவணங்களைக் காட்டி விகாரையொன்றின் தலைமைப் பிக்கு ஒருவரிடம் 28 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவரை மொனராகலைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர், தம்மை அனுராதபுரத்தில் அரச நிறுவனமொன்றில் பொறியியலாளராக கடமையாற்றுவதாகவும், அவசியம் பணம் தேவைப்படுவதால் தனது காரை விற்பனை செய்ய வேண்டுமென்று குறிப்பிட்ட விகாரையின் தலைமைப் பிக்குவிடம் கூறியுள்ளார்.

மொனராகலைப் பகுதியின் மெதகமையிலுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற விகாரையொன்றின் தலைமைப் பிக்குவிடமிருந்தே பணம் மோசடி செய்யப்பட்டது.

தம்மை பொறியியலாளராக அறிமுகம் செய்துகொண்ட நபர், தமது காரை விற்பனை செய்யப் போவதாகக் கூறியதும், தலைமைப் பிக்கு தனக்கும் ஒரு வாகனம் தேவையென்றதும், இருவருக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்றன. காரின் உரிமையாளர் என்ற நபர் காருக்குரிய அனைத்து ஆவணங்களையும் தலைமை புத்த பிக்குவிடம் சமர்ப்பித்து இரு தினங்களில் அவரிடமிருந்து 28 இலட்சரூபாவை பெற்று குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

தலைமைபிக்கு பெற்றுக்கொண்ட காருக்குரிய ஆவணங்களை மொனராகலை லீசிங் நிறுவனத்திடம் ஒப்படைத்ததும், லீசிங் நிறுவனத்தினர் அவ் ஆவணங்களை மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பியதும், அங்கு பரிசீலனை செய்த பின்னர் அவ் ஆவணங்கள் அனைத்தும் போலியானதென்று கண்டுபிடிக்கப்பட்டது. பிக்கு பெற்றுக்கொண்ட காரும் திருடப்பட்டதென்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தலைமைப் பிக்கு மெதகமை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பேரில், பணம் மோசடி செய்த நபர் கைதுசெய்யப்பட்டார். குறிப்பிட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நபர் கொட்டாவை என்ற இடத்தைச் சேர்ந்தவரென்றும், இது போன்று பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு பணம் மோசடி செய்தவரென்றும், இவ்வகையிலான புகார்களின் அடிப்படையில்,பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]