பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதால் சீனாவுக்கு வாய்ப்பு ?

பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, உலகின் மற்ற நாடுகளின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?


அமெரிக்காவின் விலகல் பாரிஸ் ஒப்பந்தத்தையும், உலகத்தையும் பாதிக்கும்
உலகின் தட்பவெப்ப நிலையை இரண்டு செல்சியசுக்கு குறைவாக வைத்திருக்கவேண்டும் என முன்மொழியப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை உலக நாடுகள் அடைவதை , டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, மேலும் சிரமமாக்கும் என்பதில் ஐயமில்லை.
உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு 15 சதவீதமாகும்.


ஆனால் அதிகரிக்கும் தட்பவெப்பத்திற்கு எதிராக போராடும் உலகின் வளரும் நாடுகளின் முயற்சிகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
”இந்த முடிவு ஒரு வரலாற்றுத் தவறாக பார்க்கப்படும். யதார்த்தம் மற்றும் அறநெறி இரண்டில் இருந்தும் வெளியேறி எவ்வாறு ஒரு உலக தலைவர் தனித்து செயல்பட்டார் என்று நமது பேரக்குழந்தைகள் நமது முடிவுகளை திரும்பிப் பார்த்து அதிர்ந்து போவார்கள்,” என்று சியரா கிளப் என்ற அமெரிக்க சுற்றுச் சூழல் குழுவை சேர்ந்த அமெரிக்க சுற்றுச்சூழல்வாதி மைக்கேல் ப்ருனே தெரிவித்தார்.
அமெரிக்காவின் சிரமம் , சீனாவுக்கு வாய்ப்பு

பாரிஸ் ஒப்பந்தத்தில்
பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில், முக்கிய பங்காற்றிய உறவு என்பது, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையிலானதாகும்.
சிறிய தீவு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன், ”பெரிய லட்சியத்திற்கான கூட்டணி” ஒன்றை கட்டியமைப்பதில் ஒரு பொதுவான கருத்துடன்பாட்டைக் காண்பதில் ,அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவராலும் முடிந்தது.
பாரிஸ் உடன்படிக்கைக்கு சீனா தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது; மேலும், கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த கூடுதலான ஒத்துழைப்பை அளிப்பது தொடர்பாக நாளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு அறிக்கையை வெளியிடவுள்ளது.
”இந்த விவகாரத்தில் யாரும் பின்னால் விடப்படக் கூடாது, ஆனால், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் முன்னோக்கி செல்வதாக முடிவு எடுத்துள்ளனர், ” என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் மிகுவல் ஆரியாஸ் கெனெட்டே தெரிவித்துள்ளார்
அதிகரிக்கும் தட்பவெப்ப நிலையை குறைக்கும் உலக அளவிலான முயற்சிகளில், அமெரிக்க நிலப்பரப்பில் உள்ள கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க நாடுகளாக உருவாகலாம்.
உலக வணிக தலைவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்
அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் தொடரவேண்டும் என்பதற்கு ஆதரவான அழுத்தமான குரலை எழுப்புபவர்கள் அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்கள்தான்.
கூகுள், ஆப்பிள் மற்றும் பெரிய எரிபொருள் தயாரிப்பாளர்களான எக்ஸான் மொபில் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா நிலைக்கவேண்டும் என்று டிரம்ப்பை வலியுறுத்தியுள்ளனர்.
எக்ஸான் மொபில் தலைவர் டேரன் வூட்ஸ் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தில், இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா இருந்து கொண்டேகூட, ”போட்டியிடுவதற்கான நல்ல நிலையில்” அமெரிக்கா உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் நிலைத்திருப்பது என்பது, ”பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மேடையில் இருந்துகொண்டு ஒரு சரிசமமான ஒரு தளத்தை உறுதிப்படுத்துவது போன்றது,” என்று கூறியுள்ளார்.
நிலக்கரி பயன்பாடு திரும்புவது சாத்தியமல்ல
நிலக்கரி பயன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகியதை அடுத்து அந்த நிலை மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் எதிரொலிக்கின்றது.
ஐக்கிய ராஜ்ஜியம் 2025 ஆண்டு வாக்கில் மின்சாரத்திற்காக நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தவுள்ளது.
அமெரிக்காவில் கூட, தற்போது சூரிய ஒளி மையமாக கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாதி அளவுதான் நிலக்கரி ஆலைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை என்ற நிலை உள்ளது.
இன்னும் சில தசாப்தங்களுக்கு வளரும் நாடுகள் நிலக்கரியை மின்சாரத்திற்கான பிரதான ஆதாரமாக கொண்டிருக்கக்கூடும் என்றாலும், அதனால், காற்றின் தரத்தில் ஏற்படும் விளைவு மற்றும் மக்களிடையே மாசுபாடு பற்றிய கோபம் என்பவை, இந்த நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தப்படுவதற்கான காரணிகளாக இருக்கும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(renewables) சாதனங்களின் விலைகள் வீழ்ச்சியடைவது, வளர்ந்துவரும் நாடுகள் பசுமையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிச் செல்வதை ஊக்கப்படுத்துகிறது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஏலங்களில் சூரிய ஆற்றலுக்கான விலை, நிலக்கரிஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான சராசரி விலையை விட 18% குறைவாக இருந்திருக்கிறது.
டிரம்ப் விலகினாலும் அமெரிக்க வாயு உமிழ்வு குறையும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் அமெரிக்காவில் காரியமில வாயுவின் வெளிப்பாடு குறையும்.
முந்தைய அதிபர் ஒபாமா திட்டமிட்டத்தில் கரியமிலவாயுவின் வெளிப்பாடு பாதியளவு குறையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
ஏனெனில், அமெரிக்காவின் மின்சார ஆற்றல் தயாரிப்பு நிறுவனங்கள் நிலக்கரியை காட்டிலும் இயற்கை எரிவாயுவை ஆதாரமாக கொண்டுள்ளன.
பாறைகளை குடைந்து அதில் சிக்கியிருக்கும் எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும் தொழில்நுட்பம் ‘பிராக்கிங்’ ( fracking) எனப்படும். இந்த தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இது இயற்கை எரிவாயுவின் விலைகளில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்துவரும் புதுப்பிக்கும் ஆற்றல்(renewable sources) சாதனங்களுடன், இயற்கை எரிவாயு, நெகிழ்வான மற்றும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது என்பதால், அதை எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள் விரும்புகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]