பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றிப்பெற்றுள்ளார்

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முடிவுகளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இம்ரான் கான் வெற்றி இந்தியா, பாகிஸ்தான் உறவை பாதிக்காது என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தவர் கூறுகையில்,

அரசியல் ரீதியிலான கடுமை மற்றும் லண்டன், புது தில்லியில் வெளியிட்ட அவரது தாராளமயக் கொள்கை என்று இம்ரான் கானின் இரு முகங்களையும் நாம் பார்த்துவிட்டோம். எனவே பாகிஸ்தானில் அவரது வெற்றி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை பாதிக்காது. மேலும் அங்கு இம்ரான் கானின் வெற்றி முன்பே கணிக்கப்பட்டது தான். ஏனென்றால் கடந்த ஒராண்டாக அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு ராணுவம் விரும்பியது. மேலும் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது கட்சியை வெளியேற்றவும் திட்டமிட்டது. அதற்கு சரியான மாற்றாக இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் கருதியுள்ளது.

அரிதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அங்கு பிரதான கட்சியாக இம்ரான் கானின் பிடிஐ உள்ளது. எனவே ஆட்சி அமைக்க சுயேட்சைகள் மற்றும் உதிரி அமைப்புகளின் ஆதரவை கோர வேண்டிய சூழல் இம்ரானுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டளைகளைப் பின்பற்றி வரும் எம்எம்ஏ கட்சி அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடும். இருப்பினும் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இம்ரான் அரசு செயல்பட்டால் எம்எம்ஏ கட்சி உடனடியாக அவருக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறக்கூடும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]