பல்கலைக்கழக ஊழியர்களின் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 2018.03.06 – செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு முன்பாக நடைபெற்றது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது சம்பந்தமாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை அதிகரிப்பது சம்பந்தமான சுற்றுநிருபத்தை வெளியிடாமை, ஒரு சாராருக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் கொடுப்பணவு இதுவரையிலும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வைத்திய காப்புறுதி திட்டம், ஓய்வூதிய திட்மொன்றை அமைப்பதற்கான செயல்திட்டமொன்றை இதுவரையிலும் முன்னெடுக்காமை உட்பட ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

‘பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின்’ ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களும் இணைந்து இந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுதந்திர சதுக்கத்தில் அணிதிரண்ட ஊழியர்கள் வோட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அலுவலகம்வரை பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் 2018.02.28ம் திகதி தொடக்கம் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் போதனைசாரா ஊழியர்கள் 2018.02.05 நள்ளிரவு 12 மணி தொடக்கம் 2018.02.07 நள்ளிரவு 12 மணிவரை 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளை,இக்கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018.01.17ம் திகதி கல்விசாரா பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தையும், 2018.01.25ம் திகதி ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பையும் நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]