பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி குறித்து கூட்டமைப்பு – படையினர் இடையே பேச்சு

பலாலி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடனான நேற்றைய கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தக் காணி தொடர்பில் உயர்மட்டப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினர், அரச அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான முத்தரப்புச் சந்திப்பு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், பலாலி விமான நிலையம் மற்றும் அனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் தொடர்பில் பேசப்பட்டது.

பலாலி விமான நிலையத்தில் 320 ஏயார் பஸ் தரையிறங்குவதற்கு தற்போதுள்ள ஓடுபாதை போதாது. அதனைப் பெருப்பிக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு மேலும் காணிகளைச் சுவீகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

பலாலி விமானத் தளத்துக்காக ஏற்கனவே இரண்டு தடவைகள் மக்களின் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. மேலதிக காணிகளைச் சுவீகரிக்காமல் பிராந்திய விமானத் தளமாக மாற்றுவது தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்று கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உயர்மட்டத்தில் பேசி முடிவெடுக்கலாம் என்றும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதா, இல்லையா என்பது தொடர்பில் மக்களுடன் பேசி தீர்மானிக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]