பறிபோனது முரளி விஜய்க்கான வாய்ப்பு : தவான் தேர்வு

முரளி விஜய்க்கு காயம் இன்னும் சரியாகாததால் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்குப் பதிலாக தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

அப்போது முரளி விஜய்யின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக ஐ.பி.எல். தொடரை புறக்கணித்துவிட்டு லண்டனில் சென்று ஆபரேசன் செய்து கொண்டார். ஆபரேசன் செய்த முரளி விஜய்யின் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இலங்கை அணிக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜய் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரது மணிக்கட்டில் வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் பிசிசிஐ மருத்துவக் குழு, அவரை முழுமையாக காயம் குணமடைவதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது.

இதனால் இலங்கை தொடரில் அவர் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 26-ஆம் திகதி காலே மைதானத்தில் தொடங்குகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]