பர்தாவுடன் தேர்வு எழுத சில மையங்களில் அனுமதி மறுப்பு?

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற கல்வி பொதுத் தராதர உயர்தரத் தேர்வில் தோன்றும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சீருடையான பர்தாவுடன் தேர்வு எழுதுவதற்கு ஒரு சில தேர்வு மையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

பர்தாவுடன் தேர்வு
இலத்திரனியல் உபகரணங்கள் பர்தாவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, பர்தாவைக் கழற்றி விட்டுத் தேர்வு எழுதுமாறு மாணவிகள் குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் பணிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கண்டி மாவட்டம் கம்பகா பிரதேசத்திலுள்ள மூன்று தேர்வு மையங்களில் பர்தா அணிந்து தேர்வு எழுத ஆரம்ப நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றார் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்.

கல்வி இராஜங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன், மாகாண மற்றும் வலய கல்வி இயக்குநர்கள் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டு, தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பல்கலைக்கழக உயர்கல்வியைத் தீர்மானிக்கும் க.பொ. த உயர்தரத் தேர்வு அடுத்த மாதம் 2-ம் திகதி வரை நடைபெறுகின்றது.

பர்தாவுடன் தேர்வு
தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் கலாசார ரீதியான சீருடையான பர்தாவுடன் தேர்வு எழுதத் தடை இல்லை என்றும், முகத்திரையிட்டு தேர்வு எழுதுவதற்குத்தான் தடை என்றும் ஏற்கனவே அரசு தேர்வுகள் ஆணையரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா வேறு, முகத்திரை வேறு என்பதை சில மேற்பர்வையாளர்களினால் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்.

இது போன்ற செயல்பாடுகள் தேர்வு எழுதும் மாணவிகளுக்கு உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]