பருத்தித்துறை, வல்வெட்டித்துறையின் இன்று பலப்பரீட்சை

அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாத யாழ். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் இன்று தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில், பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அத்துடன், ஈபிடிபி-2, சுயேட்சைக் குழு-1, தமிழர் விடுதலைக் கூட்டணி-1 என ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இன்று இடம்பெறும் நகர முதல்வருக்கான தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட்டதால், அந்தக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய சாவகச்சேரி நகரசபைக்கான முதல்வர் தெரிவின் போது கூட்டமைப்பும் போட்டியிட்டது. அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தது.

அதுபோலவே, பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல்வர் பதவிக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை நகரசபை முதல்வர் தெரிவும் இன்று நடைபெறவுள்ளது. இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பெற கூட்டமைப்புக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க சுயேட்சைக் குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன மறுத்துள்ளன.

எனினும், இந்த மூன்று தரப்புகளும் இணைந்தாலும் கூட, 7 ஆசனங்களைத் தான் தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், முதல்வர் தெரிவில் ஈபிடிபி முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.