பருத்தித்துறை – காங்கேசன்துறைக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பம்

பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்து விடப்பட்டு, பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொன்னாலை – பருத்தித்துறை வீதி முழுவதுமாக திறந்து விடப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, நேற்றுக்காலை மயிலிட்டியில், பருத்தித்துறைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். படைகளின் தலைமையக கட்டளை தளபதி மற்றும் அரச , இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

அண்மையில் மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்ட போதும், பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கி.மீ வரையான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.