பரீட்சையில் தோல்வியால் கவலைபடுவர்களா நீங்கள்? இனி கவலைவேண்டாம்!!

இலங்கை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது!

சில காலங்களுக்கு முன்பு வரை இந்த பரீட்சை மாணவர்களிடத்தில் மிகவும் முக்கியமான தடை தாண்டும் பரிட்சையாக இருந்தது உண்மை. ஆனால் தற்போது காணப்படும் இலகுவழி தொழில் முறை கற்றல் வசதிகள் இதன் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டாலும் கூட இதன் சமூகவியல் தாக்கம் எமது சமுகத்தை பொறுத்தவரை ஓயவில்லை என்றே கூறவேண்டும்.

ஒரு மாணவன் தனது விடலை பருவத்தின் மத்தியில் நின்று சந்திக்கும் முதலாவது சவால் பரீட்சை இதுவேயாகும். ஆகையால் மாணவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பரிட்சையின் வெற்றி தோல்விகளை கையாளல் மிகவும் அவசியமாகும்.

மிகவும் நுண்மையான உணர்வு தூண்டல்களுக்கு இடம் கொடுக்கும் இந்த பதின்ம வயது மாணவர்களின் பரீட்சை பின்னடைவுகள் தொடர்பில் பெற்றோர் மிகவும் சிரத்தையுடன் நடந்துகொள்வது அவசியம். அது மட்டுமன்றி இந்த வயதில் மாணவர்களின் எழுச்சி போக்கான மன நிலையில் தாழ்வு மன பள்ளத்தாக்கை உருவாக்கிவிடும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டியது.

பரீட்சைகள் அடுத்த நிலைக்கான தரப்படுத்தல்கள் மட்டுமே , இன்றைய காலத்தில் அடுத்த நிலைக்கான மாற்று ஒழுங்குகள் உள்ள நிலையில் பரீட்சையில் தோல்வி என்பது அர்த்தமற்றது.

இன்று வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அனைவருமே ஏதாவது ஒருமுறை தேர்வில் தோற்றவர்கள்தான். அதனால் தோல்வியை நினைத்து துவண்டுவிடாமல், ‘நாளை தானும் ஒரு உயர்ந்த மனிதன் ஆவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது’ என்று நம்பிக்கை கொள்ளுங்கள்!

இன்றைய காலத்தில் வாழ்க்கை பாதையின் சந்திக்கும் புள்ளி என்பது பல வழிகளை கொண்டது. பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் ஒரு பாதையால் சென்றால் , பின்னடைந்தவர்கள் இன்னுமொரு பாதையால் சென்று அந்த புள்ளியில் சந்திக்க முடியும்.

ஆனால் வாழ்க்கையின் வெற்றியை அனுபவிப்பதற்கு , முதலில் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் இருங்கள். என்னால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்னும் நம்பிக்கையை உணருங்கள்.

தோல்வியை திரும்பிப்பார்க்க வேண்டாம். அதை பற்றி விசாரிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்வது? என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

எந்த தோல்விக்கு பின்னாலும் மிகப்பெரிய வெற்றி ஒன்று ஒளிந்திருக்கும் என்பதை உணருங்கள்.

இது தொடர்பில் அனைவருக்கும் ஒரு சமுக பொறுப்புண்டு!

எமது சமுகத்தின் எதிர்கால தூண்களில் பரீட்சையில் பின்னடைவு அடைந்தவர்களும் அங்கம் வகிக்க தான் போகிறார்கள் என்னும் உண்மையை உணர்ந்து அந்த தூண்களை உங்கள் செயற்ப்பாடுகள் மூலம் நலிவடைய செய்யாதிருங்கள், அந்த தூண்கள் நலிவடைந்தால் எமது ஒட்டு மொத்த சமுக கூரையுமே ஆபத்தில் இருக்கும் என்னும் உண்மையை உணருங்கள்.

வெற்றி பெற்றவர்களை தட்டி கொடுப்பதை போல பின்னடைவு நிலையில் உள்ளவர்களையும் வாழ்க்கையில் வெற்றி அடையும் வண்ணம் தட்டி கொடுக்க தயங்க வேண்டாம்.

பெற்றோர்களே!

தேர்வு எழுதிய காலத்தில் கொடுத்ததைவிட அதிக முக்கியத்துவத்தை உணர்வு ரீதியாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

அவர்களது மனக்குழப்பத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம். உங்கள் பிள்ளையின் அடுத்த நகர்வில் நாங்கள் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம் என்று நம்பிக்கையூட்டுங்கள்.

வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. ஆனால் ஒரே வாழ்க்கை தான் .போனால் அது திரும்பி வராது’ என்ற உண்மையை உணர்ந்து பரீட்சையில் அல்ல வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நடை போடுங்கள். உங்களுக்கான பாதை காத்திருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]