பஞ்சாப்பை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியில் தவாண் 77, வில்லியம்சன் 54, வார்னர் 51 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சார்பில் முதலில் களமிறங்கிய வோக்ரா ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய குப்டில் 11 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மேக்ஸ்வெல் சந்தித்த 2ஆவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் ஷான் மார்ஸ் மட்டும் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். ஆனால், அவருக்கு எந்தவீரரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மோர்கன் மட்டும் 26 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 50 பந்துகளில் 84 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மார்ஸ் ஆட்டமிழந்ததும் அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐதராபாத் அணியில் நெக்ரா மற்றும் கவுல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி தனது 5ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் தனது 5ஆவது தோல்வியை அடைந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]