பச்சிளம் குழந்தையை கழிவு நீர் குழாயின் அடிப்பகுதியில் இருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கழிவு நீர் குழாயின் அடிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

கழிவு நீர் வெளியேறும் குழாயின் அருகே குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு அங்கு வசிக்கும் கீதா என்பவர் அங்கு சென்று பார்த்திருக்கிறார்.

சப்தம் குழாயின் அடிப்பகுதியில் இருந்து தான் வருகிறது என்பதை உறுதி செய்த அவர் அதன் கீழே பார்த்திருக்கிறார். அங்கு ஒரு பச்சிளம் குழந்தையை ஏதோ துணியை வைத்து அடைப்பது போல குழாயின் அருகே யாரோ விட்டு சென்றிருப்பதை அறிந்த கீதா உடனடியாக செயல்பட்டு அந்த குழந்தையை தன் கைகளால் பத்திரமாக மீட்டு எடுத்திருக்கிறார்.

தொடர்ந்து கழிவுநீரில் நனைந்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த குழந்தையை சுத்தம் செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி இருக்கிறார் கீதா. கீதா குழந்தையை காப்பாற்றும் காட்சியை யாரோ வீடியோ செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாகி இருக்கிறது. கீதா தாய்மை உணர்வுடன் செய்திருக்கும் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

கீதாவின் இந்த நற்செயலை அறிந்த சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர தினத்தன்று கிடைத்த இந்த குழந்தைக்கு கீதா சுதந்திரம் என்று பெயரிட்டிருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]