“பசுமை நகர்வு” கழிவுப் பொருள் மீள் பயன்பாட்டு விழிப்புணர்வுபற்றிய கண்காட்சியும் விற்பனையும்

சமகாலத்தில் சவாலுக்குரியதாக மாறிவரும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள், திண்மக் கழிவுகளை மீள் பாவனைக்குட்படுத்தி சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் “பசுமை நகர்வு”  என்ற தொனிப் பொருளில் கண்காட்சியும் விற்பனையும் விழிப்புணர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு விஷேட தேவைக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உதவு ஊக்க நிலையம் மென்கபெப் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மயில்வாகனம் வீதி, நாவற்கேணியில் அமைந்துள்ள மேற்படி உதவு ஊக்கப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை 23.11.2018 காலை 9 மணிக்கு இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மென்கபெப் இணை இஸ்தாபகரான ரஞ்சி ஸ்டப்ஸ் தலைமையில் இடம்பெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியில் பங்கபற்றி மீள் பாவினை உற்பத்திப் பொருட்களைப் பார்வைட்டு பசுமைச் சூழலுக்கான நகர்வை நோக்கிய அணியில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்மூலம் கிடைக்கப்பெறும் விழிப்புணர்வைக் கொண்டு வீட்டில், அலுவலகத்தில், சுற்றாடலில் பெருகும் பொலித்தீன் பிளாஸ்டிக். திண்மக்  கழிவுப் பொருட்களை சூழலுக்கு இசைந்ததாக பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விஷேட தேவைக்கு உட்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர், மாற்றுத்திறனாளி ஊக்குவிப்பு போதனாசிரியர்கள் ஆகியோரால் கழிவுப் பொருட்களைக் கொண்டு நேர்த்தியாகச் செய்து முடிக்கப்பட்ட அழகிய கைவேலைப்பாடுகள் நிறைந்த பல  மீள் பாவனைப் பொருட்கள் கண்காட்சியிலும் விற்பனையிலும் இடம்பிடித்துள்ளன என்று மென்கபெப் மட்டக்களப்பு ஊக்க உதவிப் பாடசாலையின் முகாமையாளர் எஸ்.பி. பிரசன்யா தெரிவித்தார்.

திண்மக் கழிவுப்  பொருட்கைளை எங்கு கொண்டு போய்க் குவிக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது சிறப்பம்சம் என்றும் அவர் மேலும் கூறினார்.

எல்லா சமூக நல விரும்பிகளும் சூழல் நேய செயற்பாட்டாளர்களும் இந்த விடயத்தைக் கரிசனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

விழிப்புணர்வுக் கண்காட்சி நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு சமூக சேவைகள் உத்தியோகத்தர் பி. ராஜ்மோகன் உட்பட இன்னும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]