பங்களாதேஷ் அணியை இறுதிப்பந்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடிய இந்திய அணி!!

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிதகாஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை இறுதிப்பந்தில் வீழ்த்திய இந்திய அணி சுதந்திர கிண்ணத்தை வெற்றிகொண்டது.

இறுதி இரு ஓவர்களில் 34 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் ஆடுகளம் நுழைந்த தமிழக வீரர் டினேஷ் கார்த்திக் அதிரடியாக 19 வது ஓவரில் 22 ஓட்டங்கள் பெற்று போட்டியில் பரபரப்பை அதிகப்படுத்தினார்.

இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் எனும் நெருக்கடியில் எதிர்முனையில் சொதப்பிக் கொண்டிருந்த விஜய் சங்கர் ஆட்டமிழக்க, இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது, கவர் திசையினூடாக சௌமியா சர்கார் பந்தை சிக்சருக்கு விரட்டிய கார்த்திக் இந்தியர்கள் இதயத்தில் பால் வார்த்தார்.

நேற்றைய முக்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா துடுப்பாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார்.


அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி  முதல் 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்து தடுமாறினாலும் சபீர் ரஹ்மான் சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் 77 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்கள் பெற்றது.

பரபரப்பான நேற்றைய இறுதி போட்டியில் இந்திய அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த போட்டியை போன்றே அணிதலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைச்சதம் அடித்தாலும் பங்களாதேஷ் அணியின் இறுதி நேர சிக்கனமான பந்துவீச்சு இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்தது.

ஆயினும் இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தெவையான நிலையில் இறுதி பந்தில் சிக்சர் அடித்து டினேஷ் கார்த்திக் இந்தியாவின் புதிய பினிஷராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் மாறிப்போனார்.

இதன்மூலம் 20 ஆண்டுகள் கடந்து மீண்டும் நடைபெற்ற நிதாகஸ் கிண்ண தொடரின் கிண்ணத்தை இந்தியாவே கைப்பற்றியது.போட்டியில் நாயகனாக டினேஷ் கார்திக்கும், தொடர் நாயகனாக வொஷிங்டன் சுந்தரும் தேர்வாகினர்.

வெற்றியின் பின்னர் இலங்கை கொடியுடன் இந்திய வீரர்கள் மைதானத்தில் வலம்வந்தமை சிறப்பம்சமாக அமைந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]