நேற்றைய அமைச்சரவை தீர்மானங்கள்

01. குருநாகலில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை விரு தரு விதுபியசவுக்காக அடிப்படை வசதிகள் கொண்ட மூன்றுமாடி கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 07)
குருநாகலில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை விரு தரு விதுபியசவில் தற்போது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வெளிக்கல செயற்பாடுகள், ஆய்வு கூடங்கள், வாசிகசாலை வசதிகள், கணனி ஆய்வு கூடங்கள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான இடவசதி இன்மையினால், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ்விலு தரு விதுபியசவில் அடிப்படை வசதிகள் கொண்ட மூன்று மாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இரசம் தொடர்பான மினமாட்டா இணக்கப்பாட்டைச் செயல் வலுவடையச் செய்தல் (விடய இல. 08)

உலகலாவிய ரீதியில் இரசத்தினால் ஏற்படக் கூடிய பாதகமான பாதிப்புக்களைக் குறைப்பதற்கென மினமாட்டா இணக்கப்பாட்டுக்கு இலங்கை உள்ளடங்கிய 128 நாடுகள் கைச்சாத்திட்;டிருப்பதுடன், 53 நாடுகள் செல்லுபடித் தன்மையையும் பெற்றுள்ளது. உலகலாவிய ரீதியில் மினமாட்டா இணக்கப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் இலங்கைக்குச் சாதகமான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு மினமாட்டா இணக்கப்பாட்டை இலங்கையில் செயல் வலுவடையச் செய்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக ஹைட்ரோ புளோரோ காபன் (HFC) பயன்பாட்டை மட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்தல் (விடய இல. 09)

சூரிய கதிர்களில் இருந்து வரும் கதிர்வீச்சை நேரடியாக மனிதனை வந்தடையாமல் ஓசோன் படை பாதுகாக்கின்றது. குறித்த ஓசோன் படையினை பாதிக்கும் இரசாயன பொருட்களை பாவனையிலிருந்து அகற்றுவது துரித தேவையென இனங்கண்ட உலகம் 1985ம் ஆண்டு வியானா ஒப்புதலும், அதன் பின்னர் 1987ம் ஆண்டு மொன்ரியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. மொன்ரியல் அமைப்பு தொடர்பில் இறுதி திருத்தம் 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ம் திகதி ருவான்டாவில் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இலங்கையினால் அத்திருத்தங்களை ஏற்றுக் கொள்வதை துரிதப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கும், அதன் பின்னர் இலங்கையினால் அத்திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் கீழியங்கும் சமூக நீர்வழங்கள் பொது அமைப்புக்களை வலுவூட்டலுக்கும் மேம்படுத்தலுக்குமான பொறிமுறையை உருவாக்குதல் (விடய இல. 11)

இலங்கை சனத்தொகையில் 90மூ மானவர்கள் பரிசுத்த குடிநீரினை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை கொண்டுள்ளதுடன், அதில் 46மூ ஆனவர்கள் தமது குடிநீரினை குழாய்களினூடாக பூர்த்தி செய்து கொள்கின்றனர். குழாய் நீர் விநியோகத்தில் 35மூ ஆனவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பூர்த்தி செய்யப்படுவதுடன், மிகுதி 11மூ ஆனது சமூக நீர்வழங்கள் பொது அமைப்புக்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. குறித்த பிரஜைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களில் எழும்புகின்ற பிரச்சினைகளை நிர்ணயித்து அதனை தீர்ப்பதில் அரசாங்கத்தின் தலையீட்டை கவனத்திற் கொண்டு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமானது 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், கிராமிய மக்களுக்காக நீர் வழங்குகின்ற சமூக நீர்வழங்கள் பொது அமைப்புக்கள் அத்திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கும், சமூக நீர்வழங்கள் பொது அமைப்புக்களை நிர்ணயிப்பதற்காக பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தின் ‘சமூக அமைப்புக்களின் ஒன்றியம்’ ஒன்றை உருவாக்குவதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் சமூக நீர்வழங்கள் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரை அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்றை 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 20ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவர்கள் முன்வைத்த காரணங்களை கவனத்திற் கொள்ளப்பட்டது.

05. இலங்கை சூழல் ஆரோக்கிய ஆயுர்வேத கிராமத்தை மற்றும் ஆய்வு நிலையமொன்றையும் அமைத்தல் (விடய இல. 14)

தேசிய வைத்திய முறைகளை பயன்படுத்தி சர்வதேச மற்றும் தேசிய தரத்திலாலான சிகிச்சை கிராமம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், அது தொடர்பிலான ஆய்வு மையத்தை நிர்மாணிப்பதை மையமாகக் கொண்டு, இலங்கையில் இலங்கை சூழல் ஆரோக்கிய ஆயர்வேத கிராமத்தை மற்றும் ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கும், அரச – தனியார் துறையினரின் இணைப்புடன் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. ஆதனத்துறை மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தை ஸ்தாபித்தல் (விடய இல.16)

சொத்து முகாமைத்துவம், விற்பனை செய்தல், அபிவிருத்தி, முதலீடல் மற்றும் மதிப்பிடல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக 2001ம் ஆண்டு ஆதனத்துறை மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கத்தை மேலும் பயனுள்ள விதத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் அந்நிறுவனத்தை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் ஸ்தாபிப்பது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. முதுராஜவெல பிரதேசத்தில் உள்ள 02 ஏக்கர், 0 ரூட், 11 பேர்ச்சஸ் காணியை டாட் குளோபல் லொஜிஸ்டிக் நிர்வனத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் (விடய இல. 17)

இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் மூலம் வத்தளை முத்துராஜவெல பிரதேசத்தில் 400 ஏக்கர் அளவிலான பூமிப்பகுதியை கடல் மணலினை பயன்படுத்தி அபிவிருத்தி செய்து பல்வேறு முதலீட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் அரச வேலைத்திட்டங்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் 03 காணித்துண்டுகள் ஏற்கனவே வழங்கல் வேலைத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 02 துண்டுகள் சாதாரண வேலைத்திட்டங்களுக்காக பெற்றுக் கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதனடிப்படையில், அக்கறை காட்டும் பிரிவினரிடத்தில் இருந்து 30 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 02 ஏக்கர், 0 ரூட், 11 பேர்ச்சஸ் காணியை அதிக விலையினை முன்வைத்துள்ள டாட் குளோபல் லொஜிஸ்டிக் (தனியார்) நிர்வனத்துக்கு 30 வருட குத்தகைக்கு, உரிய நிபந்தனைகளின் கீழ் வழங்குவது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. வெலிபடன்வில மீன்பிடி துறைமுக வளாகத்தின் காணிப்பகுதி ஒன்றை வள்ளச்சாலை ஒன்றை அமைப்பதற்காக குத்தகைக்கு வழங்குதல் (விடய இல. 18)

சுற்றுலாத்துறை, பொழுதுபோக்கு, விளையாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்களை உற்பத்தி செய்யும் வள்ளச்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு தற்போது கொக்கல தொழிற்பேட்டையில் தமது வியாபாரத்தை ஆரம்பித்துள்ள, இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள Building a Future Foundation (BAFF) நிர்வனத்துக்கு பேருவளை மீன்பிடி துறைமுக வளாகத்தின் 01 ஏக்கர், 6.4 பேர்ச்சஸ் காணியினை பெற்றுக் கொடுப்பதற்கு லங்கா மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் மூலம் 2014ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதும், உரிய மீன்பிடி சமூகத்தினரின் எதிர்ப்பால் அதனை ஆரம்பிக்க முடியாது போயுள்ளது.

அதனால், அம்பலந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவின், வெலிபடன்வில நங்கூரமிடும் பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ள, உஸ்சன்கொட, முத்தலகஹகந்தை எனும் 01 ஏக்கர் பூமிப்பகுதியை இவ்வள்ளச்சாலையை நிர்மாணிப்பதற்கு உகந்த இடமாக இனங்காணப்பட்டுள்ளதோடு, அவ்விடப்பகுதியை அரசாங்கத்தின் மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு, குத்தகையின் அடிப்படையில் அந்நிர்வனத்துக்கே வழங்குவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. நுவரெலியா மாவட்டத்தினுள் சேர்க்கும் குப்பைக்கூளங்களை அகற்றுதல் (விடய இல. 19)

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற முறையற்ற கழிவகற்றல் முறையினால் பல்வேறு சுகாதார நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர். இந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக முறையான கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான தேவை உணரப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தேவையான பூமிப்பகுதியினை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதேசத்தின் இரு பெருந்தோட்ட கம்பனிகள் மூலம் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இவ்விரு இடங்களிலும் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டங்கள் இரண்டை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தென்னை ஆராய்ச்சி நிறுவனத்துக்காக புதிய இரு மாடி ஆய்வுக் கூடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 20)

தென்னை ஆராய்ச்சி நிறுவனத்துக்காக புதிய இரு மாடி ஆய்வுக் கூடமொன்றை 47 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கும், அதில் 23 மில்லியன் ரூபாவினை ஒருங்கிணைந்த நிதியத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய 24 மில்லியன் ரூபாவினை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்நாட்டு வருமானங்களில் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. சர்வதேச இறப்பர் ஆய்வுக் குழுவின், 2018ம் ஆண்டின் வருடாந்த கூட்டத்தினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 21)

1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இறப்பர் ஆய்வுக் குழுவின், 2018ம் ஆண்டின் வருடாந்த கூட்டத்தினை இலங்கையில் நடாத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ நவின் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. குற்றவியல் விடயங்களின் பரஸ்பர சட்டமுறையான உதவியளித்தல் தொடர்பாக சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்குமிடையே ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 25)

குற்றவியல் விடயங்களின் பரஸ்பர சட்டமுறையான உதவியளித்தல் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்குமிடையே கைச்சாத்திடுவதற்கும், பின்னர் அவ்வுடன்படிக்கையினை வலுவாக்குவதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் மாவட்டங்களில் மாதிரி மற்றும் உருவாக்கப்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குதல் (விடய இல. 30)

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மாதிரி வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படாமையே குறித்த நோய் வலுப்பெறுவதற்கு காரணமாகும் என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் 11 மாவட்டங்களில் செயற்படுத்தப்படுகின்ற மாதிரி கிராம வேலைத்திட்டங்களுக்கு தேவையான குடிநீரினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து துரித கதியில் பெற்றுக் கொடுப்பதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. வீடமைப்பு மற்றும் மனிதக் குடியிருப்பு அபிவிருத்திக்காக காணிகளுக்குப் பிரவேசித்தல் (விடய இல. 31)

காணிகளின் பௌதீக தரக்குறைவைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட, நிவாரண மற்றும் பரிகாரம் ஆகிய இருவகையிலும் காப்பீடு செய்யும் செயற்பாடுகளை ஒவ்வொரு மட்டத்திலும் வலுவூட்டி, வீடமைப்பு மற்றும் மனித வள அபிவிருத்திக்கு, விசேடமாக கைவிடப்பட்டுள்ள அல்லது பயிர் செய்ய முடியாத வயற் காணிகள் போன்ற குறைப்பயன்பாட்டு காணித்து துண்டுகளை நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு பொருத்தமான முறையில் மற்றும் சூழல் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பயன்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளது.

இது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற்கொண்டு, கைவிடப்பட்டுள்ள அல்லது பயிர் செய்ய முடியாத வயற் காணிகள் போன்ற குறைப்பாட்டு காணித்துண்டுகளை பொருத்தமான வீடமைப்பு முறைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய செயன்முறை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக உரிய அமைச்சின் மற்றும் ஏனைய அரச நிர்வனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நல்லாட்சி தொடர்புடைய கொள்கைகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் – 2016 – 2018 (விடய இல. 36)

பொருளாதார டிஜிட்டல் மயப்படுத்தலின் கீழ் 2016 – 2018ம் காலப்பகுதியில் 18 வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அவற்றுள் 2017ம் ஆண்டில் இவ்வமைச்சுக்கு ஒதுக்கியுள்ள நிதி வசதிகளைக் கொண்டு செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 20 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான 10 வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை மேம்படுத்துதல் (விடய இல. 40)

2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபா நிதியனை பயன்படுத்தி காலி, கண்டி மற்றும் அநுராதபுரம் தாதியர் பாடசாலைகளில் கல்வி மற்றும் நிர்வாக கட்டிட நிர்மாணப்பணிகளை துரித ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பயாகல, வடுகொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைத்தல் (விடய இல. 41)

களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயாகல பிரதேசத்தில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப புதிதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமொன்று அமைத்தல் கட்டாயமானது என இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பயாகல, வடுகொட பிரதேசத்துக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அமைப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. மதத்தலைவர்களின் பிரதிநிதித்துவதத்துடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களை அமைத்தல் (விடய இல. 48)

நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு மாவட்ட செயலாளர் அவர்களை அழைப்பாளராக கொண்ட மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு தகைமையானவர்களின் பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களை அமைப்பதற்கும், மதங்களிடையேயும், இனங்களிடையேயும் தொடுக்கப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. மனித வள அபிவிருத்திப் புலமைபரிசில் நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஜப்பானிய நன்கொடை உதவி (விடய இல. 49)

இலங்கையின் நிறைவேற்று மட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜப்பானில் முதன்மை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் முதுமாணிப் பட்டக் கற்கை நெறியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் ஜப்பானிய அரசாங்கத்தினால் 2010ம் ஆண்டில் மனித வள அபிவிருத்திப் புலமைபரிசில் நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஜப்பானிய நன்கொடை உதவி இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 358 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொள்வதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் நன்கொடை உடன்படிக்கைகள் இரண்டினைக் கைச்சாத்திடுவதற்கு திறைசேரிச் செயலாளருக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பதில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ நிரோஷன் பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. 2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் தமது வீடுகளை இழந்த மற்றும் சொந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக வீட்டுக்கூலிக் கொடுப்பனவை வழங்குதல் (விடய இல. 52)

2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் 3,037 வீடுகள் முழுதுமாக சேதமடைந்துள்ளதுடன், 25,647 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அவ்வாறு தமது வீடுகளை இழந்த மற்றும் சொந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், அக்குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளில் வசிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வகையில், ஒரு குடும்பத்துக்கு 7,500 ரூபா வீதம் கொடுப்பனவொன்றை 2017ம் ஆண்டு ஜுன் மாதம், ஜுலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்காக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினை வலுப்படுத்துதல் (விடய இல. 53)

தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் செயற்பட்டு நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டுமாண பணிகளை செயற்றிறனாக மேற்கொள்வதற்காக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. அதனடிப்படையில் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கும், அனைத்து பிரதேச செயலகத்துக்கும் ஒரு அனர்த்த நிவாரண உத்தியோகத்தல் வீதம் நியமிப்பதற்கும், அவசர பணிகளுக்காக புதிதாக பதவிகளை உருவாக்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. நிதி அமைச்சின் ஆண்டறிக்கை – 2016 (விடய இல. 55)

2003ம் ஆண்டின் 03ம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 13ம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய, நிதி அமைச்சர் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் அந்நிதியாண்டு தொடர்பான இறுதி வரவு செலவுத்திட்ட நிலைமை அறிக்கையொன்றை பொது மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்தல் வேண்டும்.

அதனடிப்படையில் 2016ம் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் அரசிறை நிலைமையினை, அதன் நிகழ்கால மூலோபாயங்களுடன் இணங்கச் செய்ய இயலுமாக்கும் வகையிலான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்குகின்ற நிதி அமைச்சின் ஆண்டறிக்கை – 2016, நிதிக் கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]