நேபாளத்தில் கடும் நிலச்சரிவு: 9 பேர் மண்ணில் புதைந்து பலி

நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கஸ்கி, தெஹ்ராதம், பியுதன் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் வரை மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், முகு, கஸ்கி மாவட்டங்களில் உள்ள நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 4 பேரின் நிலை தெரியவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடப்பதாக அரசு தெரிவித்துள்ளது. நேற்று, ஆங்டிம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் வீடு ஒன்று புதைந்து 4 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.