நெடுந்தீவு சிறுமி படுகொலை : குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கின் தீர்ப்பு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பில் கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி சிறுமி மீன் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்ற போது கடத்தி செல்லப்பட்டு கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது வழக்கு தொடுனர் சார்பில் அழைக்கப்பட்ட சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டதையடுத்து, எதிரி தனது வாக்குமூலத்தை சாட்சி கூட்டில் நின்று அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அரச சட்டத்தரணி நா.நிஷாந்த் தொகுப்புரையில் குறிப்பிடுகையில், எதிரிக்கு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் எதிரி இக் குற்றத்தை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என தனது தொகுப்புரையில் குறிபிட்டார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெள்ளிகிழமை வழங்கப்படும் என மேல் நீதிபதி தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவுகாவல்துறையினரால் சந்தேகத்தில் கைது செய்யபப்ட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

பலராலும் இவ் வழக்கின் தீர்ப்பு மிக்க பரபரப்புடன் அவதானிக்கப்பட்ட சூழலிலேயே மேற்படி தீர்ப்பபை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ளார்.

20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் குற்றவாளிக்ளுக்கு விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கட்டத் தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனை மேலதிகமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் அதனை கட்டத்தவறினால் அதற்கு மேலதிகமாக 5 வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]