முகப்பு News நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

மழை காலநிலை தொடர்ந்தும் நீடித்தால், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, அம்பகமுவ முதலான பிரதேசங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி குருவிட்ட, எஹலியகொட முதலான பகுதிகளிலும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மண்மேடு சரிந்து விழுந்தமை காரணமாக ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து நேற்று பிற்பகல் முதல் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் தற்காலிக வீதி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், அதிக மழைவீழ்ச்சி காரணமாக லக்ஷபான நீர்த்தேகத்தின் 3 வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்த நிலையில் உள்ளன.

அத்துடன், கெனியொன், காசல்றீ மற்றும் மாவுஸ்ஸாகலை முதலான நீர்த்தேக்கங்களிலும் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரை மூடப்பட்டிருந்த இந்தியாவின் கேரள மாநில கொச்சின் விமான நிலையம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திறக்காமல் இருப்பதற்கு விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில், கொச்சின் பயணமாவதற்கு விமானப் பயண அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பயணிகள், தென்னிந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய எந்த விமான நிலையத்திற்கும் மேலதிக கொடுப்பனவுகளும் இன்றி பயணிக்க ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com