நுரைச்சோலை சூழல் பிரச்சனைகளைத் தீர்க்க முனையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நுரைச்சோலை மின்னிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஒழுங்குறுத்துகை செய்வதற்கு உயர் நீதிமன்றமானது அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைப் பணித்திருந்தது.

மின்னிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்பிரதேசத்தில் சாம்பல் துகள் காற்றில் பரவுதல் மற்றும் எஞ்சியிருக்கும் நிலக்கரி ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்களை குறைக்கும் செயன்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது நிரூபித்தது.

2016 மார்ச் மாதத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட விற்பன்னர்கள் அடங்கிய குழுவானது, இலங்கையில் அனல் மின்னிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பற்றிய கற்றலை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டவாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே, இந்த சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பான விடயங்களை அவதானிக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் பணிப்பின்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது 2017 ஏப்ரல் 5ஆம் திகதி அன்று விற்பன்னர்கள் குழுவைக் கூட்டியது.

இக்கூட்டத்தில் இலங்கை மின்சாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வட மேல் மாகாண சுற்றாடல் அதிகார சபை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், குறித்த அடிப்படை உரிமை வழக்கைத் தாக்கல் செய்த என்விரொன்மெண்டல் ஃபௌண்டேஷன் நிறுவனம், நுரைச்சோலை மீனவர் சமூகம் மற்றும் விவசாயிகள் சமூகம் ஆகியோரும் பங்குபற்றினர். இந்தப் பிரச்சனைக்கான ஒருங்கிணைந்த தீர்வை முன்மொழியுமாறு கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கோரப்பட்டது.

நுரைச்சோலை மின்னிலையம் என்று அழைக்கப்படும் “லக்விஜய’ மின்னிலையமானது நிலக்கரியால் இயக்கப்படும் இலங்கையின் பாரிய மின்னிலையம் ஆகும். 900 Mw சக்தியை பிறப்பிக்கும் இந்த மின்னிலையம் நாட்டின் ஒட்டுமொத்த சக்தித்தேவையில் 39% இனை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்கள் எழுப்பிய பிரச்சனைகள் தொடர்பின் இந்தக் குழுவானது தீவிரமாக கலந்துரையாடியது. மேலும் பிரதேச மக்களின் பிரச்சனைகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்துமூலமாக இக் குழுவிற்கு வழங்குமாறும் கோரிக்கை விடப்பட்டது.

இந்தக் குழுவின் அடுத்த கூட்டமானது 2017 ஏப்ரல் 24ஆம் திகதி திங்கட்கிழமை கூடவுள்ளதுடன் இக் கலந்துரையாடல்களின் முடிவுகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]