நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சீனித்தம்பி மோகனராஜா

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சீனித்தம்பி மோகனராஜா

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பைச் சேர்ந்த சீனித்தம்பி மோகனராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, முகத்துவாரத்தில் 22-04-1960 பிறந்த சீனித்தம்பி மோகனராஜா தனது ஆரம்பக் கல்வியை பாலமீன்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பின்னர் அரசடி மகாவித்தியாலயம், மெதடிஸ்ட் மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார்.

1977 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவதாகச் சித்தியடைந்து 1978 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் துறைக்குத் தெரிவாகி 1982 ஆம் வருடம் பொறியியல் விஷேட பட்டம் பெற்றார்

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ந் திகதி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இணைந்தார்.

இவர் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலயம் கல்லோயா இடது கரை வாய்க்கால் புனருத்தாபனத் திட்டக் காரியாலயம் களுவாஞ்சிக்குடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயம் கடமையாற்றினார்.

1987 ஆம் ஆண்டு கிரிந்தி ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியெற்றத்திட்டத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் வதிவிட பொறியியலாளராகவும் கடமையாற்றினார். 1991 ஆம் ஆண்டு நில்வளா வெள்ளத் தடுப்புத் திட்டத்தில் வதிவிட பொறியியலாளராகவும் கடமையாற்றி மீண்டும் 1994 ஆம் வருடம் மட்டக்களப்பில் பதில் பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளராக் நியமிக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் வருடம் புத்தளம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலத்தில் பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளராகக் கடமையாற்றினார்.

இதையடுத்து முதுமானிப்படிப்பிற்காக நெதர்லாந்து சென்று தனது முதுமானிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இலங்கை திரும்பி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கல்கமுவ நீர்ப்பாசனப் பயிற்சி நிறுவகத்தில் விரிவுரையாளராகவும் பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2003 ஆம் வருடம் குருநாகலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று மீண்டும் 2005 ஆம் வருடம் கல்கமுவ நீர்ப்பாசனப் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளராhக நியமிக்கப்பட்டு 2008 ஆம் வருடம் வரை கடமையாற்றினார்.

2009 ஆம் வருடம் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்று 2012 ஆம் வருடம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றினார்.

2015 ஆம் வருடம் ஒக்டோபர் மாதத்தில் பிரதான காரியாலத்திற்கு நீர் முகாமைத்துவத்திற்கும் பயிற்சிக்குமான நீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று 2017 ஆம் வருடம் நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றார்.

2017 ஆம் வருடம் கார்த்திகை மாதம் 06 ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உருவான முதல் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ அமைச்சர்; காமினி விஜித் விஜயமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற செயலாளர்கள், நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் முசலி பிரதேச விவசாயப் பெருமக்கள் முன்னிலையிலும் சகல சமய மதகுருமார்களின் ஆசியுடன் பதவிப் பிரமானம் பெற்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]