நீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவனின் சடலம் மீட்பு

நீர்த்தேக்கத்தில்

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனின் சடலம், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஹப்புகஸ்தென்ன பகுதியில் உள்ள நபர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்.

தன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி அவரது மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில், நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது கால்தவறி நீர்த்தேக்கத்தில் வீந்துள்ளார்.

அதனையடுத்து, மகனை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

எனினும், நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ள நிலையில், கடற்படை சுழியோடிகளினால் இன்று முற்பகல் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]