நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு- தமிழ் மக்கள் பெரும் அதிருப்தியில்

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டது.

பௌத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த விகாரை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பினை மக்கள் எதிர்பார்திருந்த நிலையில், அந்த விகாரை அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த பிக்கு, புத்தர்சிலையை இன்று திறந்துவைத்தார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பிரதேச மக்களை பெரும் கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டனர். கடந்த 14 ஆம் திகதி நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிவில் பொங்கல் வழிபாடுகளுக்காக மக்கள் சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் நிலை தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கிற்கு வருமாறு முரண்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின்மூலம் அது தொடர்பன வழக்கை நேற்றைய தினத்திற்கு மாற்றி வழக்கு நடைபெற்றது.

நேற்றைய வழக்கு விசாரணைகளில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட விவரங்களை கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால் அந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியது.

அத்துடன், முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியையும் எதிர்வரும் 24 ஆம் திகதியான நாளையதினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்து.

இந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்த முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் து.ரவிகரன், நிலமைகளை நேரில் கண்காணிக்கும்போது அங்கிருந்த பௌத்த துறவிகள் மற்றும் தென்னிலங்கையைில் இருந்து வருகை தந்தவர்கள் சிலரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

மேலும் அங்கு செய்தி சேகரிப்பிற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்தவர்களும் பௌத்த துறவிகள் சிலரும் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். அத்துடன், ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முரண்பட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]