நீதிமன்றத்தின் கட்டளையை கிழித்தெறிந்த பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் அழைப்பானை

நீதிமன்றத்தின் கட்டளையை கிழித்தெறிந்த பட்டதாரிகளுக்கு திருகோணமலை நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த வேளை அவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களுக்கு திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த கட்டளையை கிழித்து காலுக்கு கீழே போட்டுவிட்டு தகாத வார்த்தைகளால் பேசியவர்களை மே மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி 25 ஆம் திகதி மாகாண சபையின் பிரதான கதவுகளை மூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பட்டதாரிகள்.
இவ்வார்ப்பாட்டக்காரர்களினால் பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று தெரிவித்து திருகோணமலை நீதிமன்றத்தில் இதனை நிறுத்துவதற்குறிய கட்டளையை பிறப்பிக்குமாறு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களுக்கு பொதுமக்களுக்கோ அல்லது பொது சொத்துக்களுக்கோ பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு கட்டளை பிறப்பித்ததுடன் இதனை ஒலி பெருக்கியில் அறிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை வழங்கிய போது அதனை காலுக்கு கீழே போட்டு கிழித்து தகாத வார்த்தைகளால் பேசி நீதிமன்ற கட்டளையை உதாதீனப்படுத்தியதாகவும் இதேநேரம் அச்செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால் பாரிய பிரச்சினைகள் பொலிஸாருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குமிடையில் இடையில் நடந்திருக்கும் எனவும் தலைமையக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

நீதிமன்ற கட்ளையை உதாசீனம் செய்தவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பௌத்த பிக்கு உட்பட மூவருக்கும் நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கட்டளை பிறப்பிக்குமாறு திருகோணமலை தலைமையக பொலிஸார் நீதிமன்றை கோரி நின்றனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய நான்கு பேரையும் மே மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கட்டளையிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]