உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் – டக்ளஸ் எம்.பி

டக்ளஸ் எம்.பி

நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் – பூந்தோட்டத்தில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு

எமது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முகமாகவும் சேறுபூசும் வகையிலும் திட்டமிட்ட வகையில் இதர தமிழ் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் செயற்பட்டுவருவதையிட்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் அப்பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துரையாடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒவ்வொரு காலகட்டங்களிலும் குறிப்பாக தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது தமது சுய நலன்களுக்காகவும் சுயலாபங்களுக்காகவும் இதர தமிழ் அரசியல் வாதிகளும் சில தமிழ் ஊடகங்கள் திட்மிட்ட வகையில் சேறுபூசிவருகின்றன.

இவ்வாறு அவர்கள் எம்மீது சேறு பூசி கழங்கத்தை ஏற்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால் எமது தேர்தல் வெற்றியை மழுங்கடிப்பதே ஆகும். அந்தவகையில்தான் எம்மை நோக்கி இந்த தேர்தல் காலங்களில் இவ்வாறான பொய்ப்பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்குப் பின்னணியில் சக தமிழ் அரசியல்வாதிகளும் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றார்கள் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

கடந்தகாலங்களில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் எம்மை தொடர்பு படுத்தி பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆனால் தற்போது நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக கொலைகளுக்கான குற்றவாளிகள் யார் என்பதை வரலாறு தெளிவுபடுத்திவருகின்றது.

நாங்கள் செய்யாத குற்றங்களுக்காக வீணான அவமானங்களை தாங்கி நிற்கின்றோம். இந்த இடத்தில் இவ்வளவு பெருந்தொகையான மக்களை நாம் காணுகின்றபோது நிச்சயம் இது ஏனைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு பேரிடியாக இருக்கும் என்பது நம்பமுடிகின்றது.

அந்தவகையில் உங்களுடைய எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும். அதற்கு மக்களாகிய நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளவும் வேண்டும். நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் யாவற்றையும் நிறைவேற்றுவதற்கு எம்மால் நிச்சயம் முடியும். நம்பிக்கையே வாழ்க்கை என்ற வகையில் எங்கள் வாக்குகளை எமக்கு வழங்கி உங்கள் வாழ்வியலை ஒளிமயமான வளமானதாக மாற்றுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]