நிம்மதியான எதிர்காலத்துக்கான அரசமைப்பை உருவாக்க கூட்டமைப்பும் மு.காவும் முயற்சி!: ஹக்கீம்

நிம்மதியான எதிர்காலத்துக்கான அரசமைப்பை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.”

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு தொகுதியை நேற்றுமுன்தினம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“”அரசின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதாகும். அதில் வடக்கு மாகாணம் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீரை வழங்குவதில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததை அவதானித்து நான் பதவியேற்றதிலிருந்து இவ்வாறான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

யாழ். மாவட்டத்துக்கும் புதிய நீர் விநியோகத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் அதேநேரம், நாட்டில் முதன்முதலாக கடல் நீரை சுத்திகரித்து வழங்குகின்ற செயற்றிட்டத்தை 2 கோடியே 50 இலட்சம் டொலர் செலவுசெய்து நடைமுறைப்படுத்தத் தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.

அதேபோல் தீவுப்பகுதிகளுக்கும் வேறு வேறான திட்டங்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனையிறவு கடல்நீர் ஏரியிலிருந்தும் கடல்நீரை சுத்திகரித்து வழங்கும் செயற்றிட்ட அறிக்கையும் தற்போது தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வடக்கு மாகாணத்தின் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதிலே நாம் மிக முனைப்புடன் செயற்பட்டுக்கொண் டிருக்கின்றோம்.

அத்துடன், ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் எனது அமைச்சு செயற்பட்டுவருகின்றது. வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தித் திட்டங்களையும் எங்களால் இயன்றளவு செயற்படுத்திவருகின்றோம். அதற்கு ஒத்துழைப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட வடக்கு மாகாண சபையும் ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது.

முதலமைச்சர் செயலகமும் சில செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்திவருகின்றது. கேள்விப்பத்திரம் கோரி ஒரு வருடத்துக்குள் செய்துமுடிக்கவேண்டிய நெருக்கடிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் முயற்சியில் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தின் அனுசரணை தேவைப்படுகின்றது. ஆகவே, அதற்கான செயற்பாடுகளையும் நாம் சேர்த்து மேற்கொண்டுவருகின்றோம்.

இந்த அரசின் பங்காளிகள் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நாங்களும் இந்த நாட்டுக்கு நிரந்தரமான நிம்மதியான எதிர்காலத்தை நாடிய அரசமைப்பை ஏற்படுத்தி அனைவரதும் அபிலாஷைகளையும் தீர்த்துவைக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில், வழமைபோல் சில தீவிரவாத இயக்கங்கள் முட்டுக்கட்டைகளைப் போடும் நிலைவரம் தென்பட்டாலும் அவற்றையெல்லாம் எங்களுடைய அரசியல் தலைமைகள் சாதுரியமாக சாணக்கியமாக சமாளித்து அனைத்து சமூகங்களுக்கும் கண்ணியம், கௌரவம், சமத்துவம் கிடைக்கும் வகையில் நாட்டுக்கென புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு பிரார்த்தனை செய்கின்றேன்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]