நிபந்தனைகளுடன் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளது

நிபந்தனைகளுடன் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளது.


ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும். அதன் மேற்பார்வையுடன் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றுக்காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடந்த ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவைசேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டளர். .இதன்போது ,தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ‘வன்னி இன்’ விடுதியில் இந்த கூட்டம் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரைதயடுத்து தற்பொழுது இலங்கை தொடர்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் , இலங்கை சம்மந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றுவதற்காக ஒரு உத்தியோகபூர்வமான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்றது.

இது விடயத்தில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களின்சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலமையை எடுத்துச் சொல்வதற்காக நாள் முழுவதும் நாங்கள் கருத்து பரிமாறல்கள் செய்தோம்.

இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இப்போது வாசிக்கின்றேன். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்ஆர்சி 30- 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை கண்கானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கட்சியின் செயலாளர் கௌரவ நடேசு சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்தார். அதையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.