நிதி மோசடி குறித்து விசாரிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் வேண்டுகோள்

வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெறும் நிதி மோசடி குறித்து விசாரிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராசா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை 22.08.2018 ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாண கல்வித்துறை சார்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அங்கத்தவர்களாகக் கொண்டியங்கும், பாரிய நிதி சார்ந்த அமைப்பாக வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் உள்ளது.

திருகோணமலையில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிநடாத்தலில் சேமிப்பு, கடன் வழங்குதல், மரணாதாரக் கொடுப்பனவு, புலமைப்பரிசில் வழங்குதல் போன்ற இன்னும்பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

நீண்டகாலமாக இலாபத்தில் இயங்கி வந்த இச்சங்கமானது, 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக கூட்டுறவு அபிவிருத்தி முன்னாள் ஆணையாளர் திவாகர சர்மாவிடம் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணையாளரினால் நிதிப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் விளைவாக, நிதிக் கையாள்கை, நிதி மோசடி, ஆவணங்களை மறைத்தல் அல்லது அழித்தல் போன்ற செயற்பாடுகள் நிரூபணமானது.

ஆசிரியர்களின் உழைப்பிலான சேமிப்புப் பணத்தை அவர்களது அனுமதி பெறாமல் மாதிரிக் கையொப்பமிட்டு பணத்தைச் சூறையாடியமை இந்த விசாரணையில் நிரூபணமாகியது.

மேலும் கடன் விண்ணப்பத்திலும் ஆசிரியர்களின் பெயரில் மோசடிக் கையொப்பத்தை இட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடி

இன்னும் விழா முற்பணங்கள் மோசடியாகப் பெறப்பட்டமையும் கண்டு பிடிக்கப்பட்டன.

நியதிகளையும் மீறி மோசடியான முறையில் சங்கத்தின் தலைவரும் பொருளாளரும் காசோலைக் கையாடல்களைச் செய்துள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கத் தயாராகும் காலகட்டத்தில் ஆணையளார் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டார்.

ஆயினும், புதிய ஆணையாளர் இது குறித்து தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நாங்கள் இதுவிடயமாக தொடர்ந்தும்; சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகளைக் சமர்ப்பித்தும் அது கரிசனைக்கு எடுத்தக் கொள்ளப்படவில்லை.

எனவே இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் ததிணைக்களத்தின் கணக்குப் பரிசோதனையில் எமக்கு நம்பிக்கை இல்லை.

மாகாண உள்ளகப் பரிசோதகர்களினால் மேற்படி சங்கத்தின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் பரிசோதனைக்குட்படுத்த தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கெட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் மாகாண பிரமத செயலாளர், விவசாயக் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுச் செயலாளர், கூட்டுறவுத் அபிவிருத்தித் திணைக்கள ஆணையளார் மற்றும் உதவி ஆணையளார், கல்வியமைச்சின் பணிப்பாளர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]