நிசா விக்டர் என்பவர் பொலிசாரின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்; மீண்டும் கைதுசெய்யப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபராக கருதப்பட்டவரும் ஆவா குழுவின் தலைவராக அறியப்பட்டவருமான நிசா விக்டர் என்பவர் பொலிசாரின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

எனினும் பொலிசாரின் தீவிர செயற்பாட்டால் சிலமணி நேரத்தில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

யாழ் கோப்பாயில் அண்மையில் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துவந்த இந்த நபருக்கு நேற்றையதினம் யாழ் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

எனினும் இவரை பிணையில் எடுக்க அவர்சார்பில் அவர் உறவினர்கள் எவரும் மன்றில் சமூகமளிக்கப்படாதநிலையில் இந்த சந்தேகநபர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று இவருடன் தொடர்புபட்ட பிறிதொரு வழக்கில் ஆஜர்படுத்தும்பொருட்டு மல்லாகம் நீதிமன்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் இவர் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

அச்சமயம் குறித்த சந்தேகநபர் சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து விடுபட்டு நீதிமன்ற வளாகத்திலருந்து தப்பிச்சென்றுள்ளார்.

எனினும் துரிதமாக இவரை தேடும்பணிகளை சுண்ணாகம் மற்றும் கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட நிலையில் குறித்தநபர் கோப்பாயிலுள்ள அவரின் உறவினர் வீடொன்றில் வைத்து மீளவும் கைது செய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]