நாளை நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை

ஒத்திவைப்பு பிரேரணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், நாளையதினம் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த ஒத்திவைப்பு பிரேரணை யை முன்வைக்கவிருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெறுகின்றமை, அரசியல் கைதிகள் தங்களின் வழக்கு விசாரணைகள் தமிழ் பிரதேச நீதிமன்றத்தை விட்டு மாற்றப்பட்டமைக்கு எதிராக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை போன்ற சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

இந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை.

ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசாங்கத்தின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது.

இந்த நபர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே.

அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது.

இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன.

மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அந்த பிரேரணை ஊடாக எதிர்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]