“நாளை இலங்கைக்கு மூதேவி பிடித்த நாள்”

தேசிய அரசின் இரண்டாட்டு பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த நாளாக பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிரணி மும்முரமாக செய்துவருகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமையபெற்றது. அதன் பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.

ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியில் பங்கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான பொது எதிரணி  சுயாதீனாக செயற்பட ஆரம்பித்தது. அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசுக்கு எதிராக நிலைப்பாட்டிலேயே எதிரணி செயற்பட்டு வருகிறது.

கடந்த வருடமும் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியை பொது எதிரணி நடத்தியிருந்தது. அதேபோல் மக்களை திரட்டி கண்டியில் இருந்து நடை பயணமாக கொழும்புக்கு வந்திருந்தது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போது அங்கு பாரிய கலவரமொன்று அரங்கேற்றப்பட்டது.

இவ்வாறு அரசுக்கு எதிரான தொடர்சியான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் பொது எதிரணி நாளை இலங்கைக்கு சனிப்பிடித்த தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் பேரணியில் பொது எதிரணியின் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் எனப் பலருடன் முனன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]