நாய்க் கடியால் மரணித்த மூதாட்டியின் உடல் பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு

நாய்க் கடியால்

ரேபிஸ் நோய் தொற்றிய நாய்க் கடித்ததால் மரணித்த மூதாட்டியின் உடற்பாகம் பிரசோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு – சந்திவெளியில் வீட்டு வாசற்படியில் களைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் தெரு நாய் கடித்ததால் ரேபீஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்த மூதாட்டியின் உடற்பாகம் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் நீர் வெறுப்பு நோய்க்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, ஜீவபுரம் நாவலடி வீதியை அண்டி வசிக்கும் லக்ஷ்மணன் இராசம்மா (வயது 72) என்ற மூதாட்டி ஜனவரி 30ஆம் திகதி மாலை ரேபிஸ் நோய்த் தொற்றுக்குள்ளான விசர்நாய் கடித்ததால் பலியானார்.

ஜனவரி 04ஆம் திகதி வாசற்படியில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருக்கும்போது தெருநாயொன்று உள் நுழைந்து மூதாட்டியின் முகத்தில் கண் இமைப் பகுதியில் கடித்துள்ளது.

உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த மூதாட்டி மரமணடைந்திருந்தார்.

இவரது சடலம் உடற் கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் அடக்கம் செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை. மேற்படி மூதாட்டியின் மூளைப் பகுதி மருத்துவ ஆராய்ச்சிப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திவெளிப் பகுதியில் ஏக காலத்தில் விசர்நாய்க் கடிக்கு உள்ளான 6 வயதுச் சிறுமிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]