நான்காவது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தற்போது வரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில் நாளை மறு தினம் சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியை காண இரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இந்தியா அணி, தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்திய அணியை பொறுத்த வரை, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கான அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அணியில் இடம்பெற்றிருந்த முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் பிருத்வி ஷாவும், விஹாரியும் இந்திய அணியில் புதிதாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடினாலும் தினேஷ் கார்த்திக் அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

கடந்த போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதால். நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில், பெரிதளவில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை நான்காவது போட்டிக்கான 14பேர் கொண்ட அணி விபரங்கள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ஜேமி போர்ட்டர் நீக்கப்பட்டு, துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த போட்டியில் காயமடைந்த ஜோனி பேர்ஸ்டோவ், நான்காவது போட்டிக்கு முன்னதாக உடற்தகுதி பெற்றால் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார். இல்லையெனில் அவருக்காக ஜேம்ஸ் வின்ஸ் களமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இளம் சகலதுறை வீரரான சேம் குர்ரான், 11பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உள்ளூர் போட்டியில் இரட்டை சதம் விளாசிய மொயீன் அலி மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். சிலவேளை அடில் ராஷித் நீக்கப்பட்டு மொயீன் அலி மீண்டும் அணிக்குள் வரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜே ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலைஸ்டைர் குக், சேம் குர்ரான், கீடன் ஜென்னிங்ஸ், ஒலி போப், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இத்தொடருக்கான 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள போதும், இந்திய அணி விபரம் வெளியிடப்படவில்லை. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதொரு போட்டியாக அமையவுள்ளது என்பதில் எவ்வித மாற்று கருத்துமே இல்லை.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால், டெஸ்ட் தொடரை வென்றுவிடும். இந்தியா அணி வென்றால் தொடரை தக்கவைக்கும். ஆகவே, நாளை மறு தினம் ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இரண்டு அணிகளும் பலம்வாய்ந்த அணிகள் என்பதால், இப்போட்டியின் முடிவுகளை காண இரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நொட்டிங்காம், ட்ரென்ட் பிரிஜ்ட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இந்தியா அணி 203 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதற்கமைய இத்தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]