நாட்டின் சகல வீழ்ச்சிகளுக்கும் கட்சி அரசியல் முறைமையே காரணியாகும் சர்வோதயத் தலைவர் கலாநிதி ஆரியரத்ன

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கட்சி அரசியல் முறைமையே நாட்டின் சகல வீழ்ச்சிகளுக்கும் காரணம் என சர்வோதய இயக்கத்தின் தலைவரும் இலங்கை அரசியல் சாசன உறுப்பினர்களில் ஒருவருமான கலாநிதி ஏ.ரீ. ஆரியரத்ன குறிப்பிட்டார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் தேவை குறித்து அவர் புதன்கிழமை 05.09.2018 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளதாவது, மரத்துடன் அதன் பட்டை ஒட்டியுள்ளதைப் போன்று ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்ற இன்றைய அரசியல் பொருளாதார முறைமையானது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சகல வீழ்ச்சிகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.

சனநாயகத்தின் அடிப்படைக் காரணியாக அமைந்துள்ள மக்கள் இறைமையினைக் கூட சீரழித்துள்ள கட்சி அரசியல் முறைமையானது எமது நாட்டின் சகல வீழ்ச்சிகளுக்கும் பிரதான காரணியாய் அமைந்துள்ளது.

ஒரு மதத்தைப் பின்பற்றுவது போன்று கட்சி அரசியலினைத் தழுவிக் கொள்ளும் நபர்கள் அதிகாரத்திற்காகவும், சொகுசுக்காகவும், அந்தஸ்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப்பட்டு மனிதப் படுகொலைகளையும் இன்னபிற அழிவுகளையும் ஏற்படுத்துகின்றனர். இயற்கையையும் இயல்பையும் மாற்றுகின்றனர்.

நாட்டை ஆட்சி செய்தோரும், செய்து கொண்டிருப்போரும் எதிர் காலத்தில் ஆள அவாக் கொண்டிருப்போரும் என அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் இந்த நாசகாரச் செயல்களின் பங்காளர்களே ஆவர்.

கட்சி அரசியல் எனும் நோய்க்கிருமி கிராமங்கள் தோறும் வியாபித்ததன் காரணமாக மக்களுக்கு மத்தியில் சாதி, இன, மொழி, வகுப்பு பேதங்கள் தோற்றம் பெற்றதன் விளைவாக பிரிவினைகளும் அழிவுகளும் எற்படுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணமாக பொது நலன் நோக்கிய அபிவிருத்திக்கு மக்களை அணிதிரட்டிக் கொள்ள முடியாதுள்ளது.

உள்நாட்டுச் சிந்தனைக்குப் பதிலாக மேற்குலகிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகள் அட்டைப் பூச்சிபோல் ஒட்டிக் கொண்டு ஆக்கிரமித்துள்ளன.

1977ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் எமது நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் அரசதுறை என்பன அழிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின.

நாம் சுதந்திரமடைந்து சுமார் 7 தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும் கூட இன்னமும் எம்மால் சிங்களம், தமிழ், முஸ்லிம் மலாயர், பறங்கியர் என்று பிரிந்து நிற்கத்தான் முடிந்திருக்கிறதே தவிர ஒன்றிணைந்து பயணிக்க முடியவில்லை. இலங்கையர் எனும் அடையாள்தை இழந்தே நிற்கிறோம்.

நடைமுறையிலுள்ள இந்த அரசியல் கட்டமைப்பின் காரணமாக சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ளது.

எனவே, கட்சி அரசியல் முறைமைக்குப் பதிலாக தொழில்சார் அரசியல்வாதிகள் இல்லாத மாற்று மக்கள் பங்கேற்பு அரசியல் முறைமையொன்றை உருவாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் ஒட்டுமொத்தமாக ஒரு நச்சுச் சூழலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனினும் இதனை இவ்வாறே விட்டு வைக்காமல் நாம் இந்த உலகத்தைத் தூய்மையானதாக மாற்றி எதுவுமறியாத அப்பாவிகளாகப் பிறக்கப்போகும் எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான ஒரு உலகத்தைப் பரிசளிக்க வேண்டும்.” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

87 வயதாகும் கலாநிதி ஆரியரத்தன 1958 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தை நிறுவி சுமார் 60 வருடங்கள் அந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதோடு இலங்கை அரசியல் சாசன உறுப்பினர்களில் ஒருவராகவுமுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]