நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயத்மை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

இந்த வழக்கில் மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வினால், இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஹிந்த அணியின் இடையீட்டு மனுக்களையடுத்து, ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் 4 1/2 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]