நாங்கள் என்ன தவறு செய்தோம்! நெஞ்சை உருக்கும் சிரிய குழந்தைகளின் கண்ணீர்!!

சிரியாவில் அரசு, கிளச்சியாளர்கள், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிறுவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.

எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தட்டிக் கேட்காமல் உலக நாடுகள் அமைதி காப்பது ஏன் என்று அந்தப் பிஞ்சுகள் கதறும் காட்சிகள் சமூகவலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் சில பகுதிகளையும், ஐஎஸ் தீவிரவாதிகள் சில பகுதிகளையும் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இவற்றை கைப்பற்றும் விதமாக சர்வதேச நாடுகளின் கண்டனத்தை மீறி ரஷியாவின் உதவியுடன் அல் ஆசாத் அரசு அடாவடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு குவாட்டாவில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பயங்கர தாக்குதலை அரசு நடத்தியுள்ளது.

கடந்த 9 நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர். குவாட்டாவில் நடத்தப்பட்ட கெமிக்கல் தாக்குதலில் 170க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்கு அடியிலும் பங்கர்களிலும் மறைந்திருக்கும் சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கின்றன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், பெண்கள் உதவி கிடைக்காமல் தவிப்பது உலக சமுதாயத்தை உலுக்குவதாக அமைந்து உள்ளது.

தான் உயிருக்கு போராடினாலும் தனது சகோதர, சகோதரிகளை காப்பாற்ற துடிக்கும் அந்த பிஞ்சுகளின் புகைப்படங்கள் கூட உலக நாடுகளின் அமைதியை உடைக்க முடியவில்லை.