20வது அரசியல் திருத்தத்தை ஆதரிக்காத அரசியல் முட்டாள்களாக நாம் – நஸீர் அஹமட்

ஜனநாயகத்தின் வெற்றிக்கான ஒரு விடயமாக 20வது அரசியல் திருத்தத்தை நாங்கள் பார்க்கின்றோம் – நஸீர் அஹமட். அதனை ஆதரிக்காத அரசியல் முட்டாள்களாக நாம் சரித்திரத்தில் இடம்பிடிக்க விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் பற்றி அறிவூட்டும் நிகழ்வு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏற்பாட்டில் ஏறாவூர் அல்முனீறா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை 28.10.2017 இடம்பெற்றது.

அங்கு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,

சமகாலத்தில் சிலாகித்துப் பேசப்படுகின்ற பல விடயங்கள் பற்றித் தெளிவில்லாத் தன்மை இருப்பதால் அவற்றைத் தெளிவுபெற்றுக் கொள்ள வேண்டிய கடமை பொதுவாக ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. குறிப்பாக அரசியல் ஆர்வலர்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொண்டால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள வழியேற்படும்.

20வது அரசியல் திருத்தம், மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திலே பெண்கள் உள்வாங்கப்படுகின்ற விடயம், 50 இற்கு 50 என்கின்ற கலப்பு முறைத் தேர்தல் விடயம், மாகாண சபைகள் எல்லை மீள் நிர்ணய விடயம் என்பன இவற்றில் பிரதானமானவை.

20வது அரசியல் திருத்தத்தை கிழக்கு மாகாண சபை ஏன் எதிர்த்தது அதன் பின்பு ஏன் ஆதரவு வழங்கியது என்கின்ற விடயமும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்றது. இது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

கிழக்கு மாகாண சபை மட்டுமல்ல வேறு சில மாகாண சபைகளும் இதனை எதிர்த்தன.

20வது அரசியல் திருத்தத்திலே ஒரேயொரு விடயம் மாத்திரம்தான் நாங்கள் எதிர்த்த விடயம்.

அதாவது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு திகதி அறிவிக்கப்படுகின்ற விடயம் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்ற ஒன்றைத்தான் நாங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொண்டு அது பற்றி மிக உன்னிப்பாக பரிசீலித்தோம்.

மாகாண சபையினுடைய முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரமாக உள்ள மாகாண சபையைக் கலைக்கின்ற அதிகாரம் அதனை நாடாளுமன்றம் தன்னகத்தே கைப்பற்றிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேளையிலே சட்டமா அதிபர் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தத் திருத்தலே மாகாண சபையினுடைய தேர்தல்கள் எந்த மாகாண சபை முதலாவதாக கலைக்கப்படுகின்றதோ கலைக்கப்படுகின்ற அந்தத் திகதியிலிருந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இயல்பாகவே அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெறும்.

மாகாண சபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி தொடர்ந்திருக்கும் என்பது திருத்தத்திலே உள்ளடக்கியிருந்த இரண்டாவது முக்கியமான விடயம்.

இந்த 20வது அரசியல் திருத்தத்திலே “எல்லை நிருணயம், தொகுதி வாரி முறைமை” என்கின்ற எந்தவொரு வசனத்தையும் எங்காவது மேற்கோள் காட்ட முடியுமா?

இவை ஒன்றையுமே அறியாது அரசியல் ஞானிகளாக தங்களைத் தாங்களே உருவகப்படுத்திக் கொள்கின்ற மட்டரகமான சில குறையறிவு குழப்பவாதிகள் மக்களைக் குழப்புகிறார்கள்.

மாகாண சபையில் எங்களுக்குத் தரப்பட்ட திருத்தச் சட்ட வரைவு பொதுவெளியில் விடப்பட்ட ஒன்று. இதில் எந்தவித ஒளிவு மறைவுமில்லை. அத்தோடு உயர் நீதிமன்றத்திலே உள்ள ஆவணம் அது.

நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட விடயம் 20வது அரசியல் திருத்தம் அல்ல.

நாடாளுமன்றத்திலே மாகாண சபைகள் சட்டத் திருத்தத்திற்குள் வேறொரு திருத்தம் கொண்டு வரப்பட்டு “தொகுதி, எல்லை நிர்ணயம்” என்ற சுத்துமாத்துக்கள் எல்லாம் புகுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயத்திற்கும் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது அரசியல் திருத்தத்திற்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

மஹிந்தவின் ஆட்சியிலே அவருடைய அரசியல் வெற்றிக்காக அவருக்கு விரும்பிய நேரத்திலே தேர்தல்களை நடாத்தக் கூடியவாறு ஏற்பாடுகள் இருந்தன. அதில் அவர் விரும்பிய மாகாண சபைகளைக் கலைப்பதும் உள்ளடங்கியிருந்தது.

அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான முறை என்று நாமெல்லோரும் ஆதங்கப்பட்டோம். ஜனநாயகத் தன்மை என்றால் எல்லா மாகாணங்களும் ஒரே தினத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு ஒரே தினத்தில் ஆட்சியேறி ஒரே தினத்தில் கலைக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாது விட்டால் ஆட்சியிலே இருப்பவர்கள் தங்களது முழு அதிகாரத்தையும் அரசியல்வெற்றி கொள்ளப் பயன்படுத்துவார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு தனி அதிகார நபராக இருக்கும் மாகாண ஆளுநருடைய கையிலே ஒட்டு மொத்த மாகாண மக்களின் ஆட்சி தலைவிதியாக இப்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை சில அரசியல் குறையறிவு முட்டாள்கள் சரியெனக் கூறி குதூகலிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]