பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியப்படாது : நவநீதம்பிள்ளை

பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார.

நவநீதம்பிள்ளை

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாதபட்சத்திலும் விசாரணைகளை ஆரம்பித்து நீதியை நிலைநாட்ட முடியும்.

காணாமற்போனவர்கள் இறந்துவிட்டனர் என்பதை அவர்களது உறவினர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார்.

நீதி,பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு போன்றவை இல்லாமல் நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இலக்குகளை அடைய முடியாது.

விசாரணைகளை ஆரம்பித்து நீதி நிலைநாட்டப்படும் வரை அவற்றைத் தொடர்வதற்காகவே காணாமற்போனவர்கள் குறித்த விவரங்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன.

தகவல்களோ அல்லது சாட்சிகளோ உள்ள பட்சத்தில் உங்கள் கையிலுள்ள ஆவணங்களிலும், ஏனைய குழுக்களிடமுள்ள ஆவணங்களிலும் குறிப்பிட்ட விடயங்கள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அதனை அடிப்படையாக வைத்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.

ருவண்டாவில் பாரிய இனப்படுகொலையின் பின்னர் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. ருவண்டா அரசு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

குறிப்பிட்ட தீர்ப்பாயம் படுகொலைகளை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை நம்பிச் செயற்பட்டது. தீர்ப்பாயத்தின் முன் எவரும் நிறுத்தப்படவில்லை, தடயவியல் ஆய்வுகள் எவையும் இடம்பெறவில்லை.
ஆயிரக்கணக்கான டுட்சிகள் கொல்லப்பட்டனர் என மக்கள் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த மக்களுக்குத் தெரிந்த பலர் தற்போது உயிருடன் இல்லாததைக் கருத்திற்கொண்டே தீர்ப்பாயம் மக்களின் வாக்குமூலங்களை ஏற்றுக்கொண்டது.

ருவண்டாவுக்கான தீர்ப்பாயம், யுத்தம் மற்றும் மோதல் இடம்பெற்ற சூழலை கண்ணால் கண்டவர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டது.

நவநீதம்பிள்ளை

மோதலின்போது கொல்லப்பட்டவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாதபட்சத்திலும் நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு பக்கச்சார்பற்ற நீதியை நிலைநாட்டலாம் என்பதற்கான முன்னுதாரணங்களாக ருவண்டாவுக்கான தீர்ப்பாயமும், யுகொஸ்லாவியாவுக்கான தீர்ப்பாயமும் காணப்படுகின்றன.

இலங்கைக்கான எனது விஜயத்தின்போது, அவ்வேளை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக விளங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் காணாமற்போனவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை உறுதிசெய்வதற்காக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.

அவ்வேளை அவர், காணாமற்போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அவர்களது உறவினர்கள் ஏற்கத் தயாரில்லை எனக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் சில சிங்களக் குடும்பங்களை நான் சந்திப்பதற்கு கோட்டாபய ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு வந்திருந்த தந்தையொருவர் தனது ஒரேயொரு மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாமல் தான் படும் வேதனையை கண்ணீருடன் தெரிவித்தார். தனது மகனின் உடலையாவது காண்பிக்குமாறு அவர் மன்றாடினார். அந்தத் தந்தையிடம் கோட்டாபய மிகவும் உறுதியாக உமது மகன் இறந்துவிட்டார். அதனை நீர் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

காணாமற்போனவர்களின் மரணம் குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவாகத் தெரியும் அல்லது அவர்கள் அது குறித்து தெளிவாக நம்புகின்றனர்.

யுத்தத்தின் சூழலையும், பலர் திரும்பிவராததையும் கருத்தில் கொள்ளும்போது அவ்வாறு நம்பாமல் இருக்கமுடியாது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]