நல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டு சம்பவம்: இளைஞர் ஒருவர் கைது

நல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டு சம்பவம்: இளைஞர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து திருட்டு சம்பவத்தோடு தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவத்திலேயே சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத்திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுள்ள நிலையில், நீதிபதியின் மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் காரின் கண்ணாடியைப் மூடாததை தொடர்ந்து, காரிற்குள்ளிருந்த நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

பூசை வழிபாட்டினை நிறைவு செய்து விட்டு வந்த போதே, காரில் இருந்த கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுள்ளதை அறிந்த நீதிபதி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நல்லூர் ஆலய வளாகத்தில் நின்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]