நல்லிணக்கம் வலுப்பெற வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

நல்லிணக்கம் வலுப்பெற வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் – யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

நல்லிணக்கம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே தேசிய நல்லிணக்கம் வலுப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆதரவுப் போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தருமாறு மாணவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பெயரில் கலந்துகொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கேற்ப ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் ஏனைய சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தற்போது உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளது கோரிக்கைகள் நியாயமானவை. இருந்தபோதிலும் எனக்குள்ள அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினை தொடர்பாக உரியவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

அந்த வகையில்தான் களுத்துறை சிறைச்சாலையில் என்மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பத்தரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களை தண்டிக்க வேண்டாம் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம் கிடையாது. இவ்வாறு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சித்திலேயே தேசிய நல்லிணக்கம் வலுப்பெறும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்பகிறேன்.

இதனிடையே மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பதில் வழங்கியிருந்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் 39 ஆவது நாளாக இன்றும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக் மாணவர்கள் இன்று 5 ஆவது நாளாகவும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]