நல்லிணக்கம் ஏற்படாமல் ஒருபோதும் முன்னோக்கிப் பயணிக்கவே முடியாது

எமது நாட்டில் பாரதூரமான யுத்தமொன்று ஏற்பட்டிருக்காவிடின் இன்று நாம் பாரிய அபிவிருத்தியடைந்திருப்போம். முன்னோக்கிப் பயணிக்கத் தடையாகவுள்ள இனவாத, மதவாத சக்திகளை துடைத்தெறிந்து சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டி ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

நான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டேன். அங்கு எமது நாட்டில் மீண்டும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளமைக்கான காரணிகளைக் கண்டறியக் கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பாரிய பொருப்புகளும் உள்ளன.

இன்று வடக்கில் தீவிரவாதம் இல்லை. இளைஞர்,யுவதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற அங்கு அபிவிருத்திச் சென்றடைய வேண்டும். மறுபுரத்தில் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும்.
பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துச் செயற்படுகின்றன. எமது நாட்டில் நீண்டகால பிரச்சினையாகவுள்ள ஒருமைப்பாட்டை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. புதிய அரமைப்பின் ஊடாக எவ்வாறு ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது? அந்தக் காரணியை கண்டறிந்து நாடு என்ற அடிப்படையில் நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.

மீண்டுமொரு யுத்தம் ஏற்பட அனுமதிக்க முடியாது. நல்லிணக்கம் இல்லாது அபிவிருத்தி ஒருபோதும் சாத்தியப்படாது. 1983ஆம் ஆண்டு எம்மிலும் பார்க்க பொருளாதாரத்தில் பின்னடைவில் இருந்து நாடுகள் இன்று பாரிய அபிவிருத்தியடைந்து முன்னேறியுள்ளன. இந்தோனேஷியா, தாய்லாந்து, விடயட்னாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எம்மை விட இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன.

லாவோஸ், கம்போடியா, மியன்மார் உள்ளிட்ட நாடுகள் மாத்திரமே இன்று எமக்குப் பின்னிலையில் உள்ளன. இதற்கு காரணம் என்ன? எமது நாடு முகங்கொடுத்த பாரதூரமான யுத்தமே. யுத்தமொன்று ஏற்பட்டிருக்காவிடின் மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளையும் விட இன்று நாம் பாரிய முன்னேற்றத்தை கண்டிப்போம்.

வடக்கில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்தச் சமாதானத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் 10, 15 ஆண்டுகளில் நாம் மத்திய வருமானத்தை பெரும் நாடாக மாற முடியும். சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்த தடை ஏற்படுமாயின் அதனை உடனடியாக துடைத்தெறிய வேண்டும்.

இன்று எமது நாடு சர்வதேசத்தை வெற்றிக்கொண்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஆதரவும் எமக்கு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் கிடைத்துள்ளது. இதன்மூலம் பொரளாதாரம் வலுவடையும். சர்வதேச ஆதரவை பெற்று நாம் முன்னோக்கிப் பயணிக்கும் போது பிரதானமாக பார்க்கப்படுவது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தையே. நல்லிணக்கத்தை சீர்க்குழைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது.

பிரிவினைவாத்தை தூண்ட முற்பட்டமை தோல்விக்கண்டமையை அடுத்து சில கும்மல்கள் தற்போது மதவாதத்தை தூண்டப்பார்க்கின்றனர். அதனூடாக இனவாத்தையும் தூண்ட பார்க்கின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து அதனைத் தோற்கடிக்க வேண்டும்.
இலங்கையை பிரிக்க இடமளிக்க முடியாது. மதம் என்பது ஒற்றுமையையே பிரதிபளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தை அல்ல. இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முற்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]