முகப்பு News Local News நல்லிணக்கத்திற்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்: நஸீர் அஹமட்

நல்லிணக்கத்திற்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்: நஸீர் அஹமட்

நல்லிணக்கத்திற்கு மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்: நஸீர் அஹமட்

அரசாங்கம் நல்லிணக்கத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் முன்னெடுப்புகளும் சிறுபான்மையினரின் அரசியல் அந்தஸ்தும் என்ற தலைப்பின் கீழ் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த நிலையில், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இலங்கையில் இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள், மலையகத் தமிழர்கள் மலாயர்கள், வேடுவ சமூகத்தினர் உட்பட அனைத்து சிறுபான்மைச் சமூக மக்களின் நம்பிக்கையையும் ஆளும் அரசு பெற்றாக வேண்டும்.

எனவே அதற்குத் தோதான விட்டுக் கொடுப்புகளுக்கு அரசியல்வாதிகள் தயாராகவும் வேண்டும்.

நாட்டு மக்கள் இன மத மொழி வேறுபாடின்றி தாம் எப்போது சுதந்திரமாக பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கின்றோம் என உணர்கின்றார்களோ அப்போது தான் இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்.

அரசியல் அதிகாரங்களில் கோலோச்சியவர்களும் ஆயுத பலத்தைக் கொண்டிருந்தவர்களும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதால் உண்டான அழிவு தரும் விளைவுகளை நாடு அனுபவித்திருக்கின்றது. இந்த துரதிருஷ்ட நிலைமை இனியும் தொடரக் கூடாது.

சிறுபான்மையினரின் மனங்களில் மேலும் அச்சமும் பீதியும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படாவண்ணம் புதிய அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வின் ஊடாக நிரந்தரமான அரிசியல் தீர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான முஸ்லிம் தமிழ் சமூகங்களும் பெரும்பான்மை மக்களில் கணிசமானோரும் ஒரு போதும் நல்லிணக்கத்திற்கு தடையானவர்களாக இருந்ததுமில்லை. இனிவரும் காலங்களில் இருக்கப்போவதுமில்லை.

இந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை வென்றெடுக்கவேண்டுமாயின் முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக சட்ட ஆட்சியும், நீதியும், நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்காத வண்ணம் சமத்துவமான பாரபட்டசமற்ற பகிர்ந்தளிக்கப்பட்ட அரசியல் அதிகார அரசாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com