நல்லாட்சி அரசை வெற்றிபெறச் செய்த மூன்றாவது சிறுபான்மைச் சமூகத்தை தோல்வி அடையச் செய்வதற்கு அரசு முனையக் கூடாது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

நல்லாட்சி அரசை வெற்றிபெறச் செய்தவர்களில் மூன்றாவது சிறுபான்மைச் சமூகத்தின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதை உணராத நிலையில் நல்லாட்சி அரசு தற்போது நகர்வது கவலையளிப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் கலப்புத் தேர்தல் முறை தொடர்பாக திங்கட்கிழமை 06.08.2018 வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்பிக்கையற்று குழப்பங்களோடு இருந்த சிறுபான்மையினர் அந்தக் குழப்பகரமான அரசை மாற்றி நல்லாட்சி அரசை ஆட்சிபீடமேற்றினர்.
இதில் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வகிபாகம் பெரிதாக இருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசின் தற்போதைய போக்கு அந்த மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களைத் தோற்கடிப்பாக அமைந்திருக்கிறது.
நல்லாட்சி அரசு கலப்புத் தேர்தல் முறையை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் மூன்றாவது சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தை அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்குவதோடு அவர்களது இன்னபிற அரசியல் உரிமைகளையும் இல்லாதொழிப்பதாகவே அமைந்து விடும்.

இதுவொரு ஜனநாயக மறுப்பாகவும் நல்லாட்சியின் கொள்கை விரோதச் செயற்பாடாகவும் கருதிக் கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.
கலப்புத் தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வருவது மாகாண சபையிலும், நாடாளுமன்றத் தேர்லில் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவத்தை மிக மோசமாகக் குறைக்கக் கூடிய சாத்தியமுள்ளது.

மேலும், கலப்புத் தேர்தல் முறையை முதன் முதலாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது அமுல்படுத்திப் பார்த்த அனுபவத்தின் மூலம் அது இந்த பல்லின சமூக நாட்டுக்கு நடைமுறையில் பொருந்தாது என்பதைக் கண்டுள்ளது இந்த நல்லாட்சி அரசு. கலப்புத் தேர்தல் முறையால் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் ஸ்திரமாக இல்லை என்பதைக் கண்டுணர்ந்து வருகின்றோம். அங்கு நிருவாகம் சுமுகமாக இடம்பெறவில்லை.

ஆகவே இந்த கலப்பு முறைத் தேர்தல் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் இதே மாதிரியான தொங்கு இழுபறி நிலையே நிருவாகத்தில் ஏற்படும். அதனால் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.

பழைய தேர்தல் முறை மாத்திரமே சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் சிறு கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடியது.
இந்த முழு நாடும் நம்பிக்கையை இழப்பதற்கு முன்பதாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் கொண்டுவரக் கூடியதாக நல்லாட்சி நல்ல அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]