நல்லாட்சி அரசிடம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு போதியளவு பணம் இல்லை; யோகேஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

நல்லாட்சி அரசிடம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு போதியளவு பணம் இல்லாமை காரணமாகச் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றது. இதற்காக மதுபான தொழிற்சாலைகளை அமைத்து அதன்மூலம் வரியைப் பெறுவதன் மூலமே அரசு இயங்குகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று எருவில் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் பலர் எமது மக்களுக்காகவேண்டி பல உதவித்திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அந்தவகையில் அதிகமான உதவிகளைச் செய்பவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த அன்பர்களே. ஆனால், இன்று இந்த உதவியைச் செய்ய கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் முன்வந்திருப்பதானது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும். இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனையவர்களும் எமது மக்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் மக்கள் நலன் சார்ந்த எத்தனையோ பல திட்டங்களை அரசிடம் முன்வைத்திருக்கின்றோம். ஆனால் அத்திட்டங்கள் எதுவும் உரிய கால நேரத்திற்குள் முடிவடைவதில்லை. இதன்காரணமாக மக்கள் மத்தியில் நாங்கள் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழர் பிரதேசங்களில் இன்னும் எத்தனையோ அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செய்யவேண்டி இருக்கின்றன.அதற்கான எத்தனையோ செயற்றிட்டங்களை அரசிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அதனை உரிய கால நேரத்திற்குள் செய்து முடிக்கமுடியாத நிலையில் அரசு திண்டாடிக்கொண்டிருக்கின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]