மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது

நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்றும் தெரிவித்தார்.

இன்று (29) முற்பகல் மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அனைத்து பிரசாரங்களும் அரசாங்கத்திற்கு எதிரான சிலரினால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும்.


அனைத்து நாடுகளும் இன்று இலங்கையுடன் நட்புறவுடன் செயற்பட்டு வருகிறது. இதன்மூலம் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன. இது குறித்து மக்கள் உண்மையான தெளிவுடன் செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அரசாங்கத்துடனும் மாகாண சபையுடனும் இணைந்து ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது என்றும் கூறினார்.

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதிஇ கல்லூரியின் மூன்று மாடி நிர்வாக கட்டிடத் தொகுதியையும் திறந்து வைத்தார்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அதிபர் ஏ.எம். ஹலீம் இஷாட் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை கையளித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்இ பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]