நயன்தாராவுடன் டூயட் பாட ஆசை: நடிகர் சூரி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நான் 1996-ம் வருடம் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் வாய்ப்பு தேடினேன். முதலில் படுத்து தூங்குவதற்கு ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்தேன். அதற்காக சினிமா ஆர்ட் டிபார்ட்மென்டில் கூலி வேலைக்கு சேர்ந்தேன். அதன்மூலம் சென்னையில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டேன். ஆர்ட் டிபார்ட்மென்டில் வேலை இல்லை என்றால், கூலி வேலைக்கு போய்விடுவேன். அல்லது பெயிண்டராக மாறிவிடுவேன்.

சூரி இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று என்னுடன் வேலை செய்தவர்கள் சொல்வார்கள். வேலை செய்துகொண்டே மற்றவர்களை சிரிக்க வைப்பேன். முதலில் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சென்னை கே.கே.நகரில் உள்ள சிவன் பார்க்கில் தான் ஒத்திகை பார்ப்போம். ஒரு நாடகத்தில் நான் வீரப்பனாக நடித்தேன். அதற்காக ரூ.400 சம்பளமாக கொடுத்தார்கள்.

சினிமாவில் நான் தலைகாட்டிய முதல் படம், ‘ஜி’. முதல் படத்திலேயே அஜித்குமார் பாராட்டும்படி, நடித்துவிட்டேன். அடுத்து நான் நடித்த படம் ‘காதல்’. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம்பெற்ற ‘புரோட்டா சீன்’ தான் என்னை பிரபலமாக்கியது. எல்லோருக்கும் தெரியவைத்தது.

இவ்வாறு சூரி கூறினார்.

அதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சூரி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவதாக கேள்விப்பட்டோமே… அது உண்மையா?

பதில்:- இந்த வினாடி வரை அப்படி ஒரு எண்ணம் எனக்குள் தோன்றவில்லை.

கேள்வி:- எந்த கதாநாயகியுடன் உங்களுக்கு டூயட் பாட ஆசை?

பதில்:- வாய்ப்பு கிடைத்தால் நயன்தாரா உள்பட எல்லா கதாநாயகிகளுடனும் டூயட் பாட ஆசை. இதற்கு அவர்களுக்கும் ஆசை இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லை என்றால் உள்ளே (சிறைக்குள்) தள்ளிவிடுவார்கள்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் யார்?

பதில்:- சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, வி.கே.ராமசாமி இவர்களுடன் என் தந்தையும் ஒருவர். எனது அப்பா மிகச்சிறந்த நகைச்சுவை ரசிகர். அவர் சொல்லிக்கொடுத்தபடி தான் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.”

மேற்கண்டவாறு சூரி பதில் அளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]