நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் என்னை விரட்டியடித்துக் காட்டுங்கள்- மஹிந்த அணிக்கு சபாநாயகர் சவால்

“நாடாளுமன்றத்தில் நான் கட்சி சார்பாகச் செயற்படவில்லை. நடுநிலையுடன் செயற்படுகின்றேன். என் மீது அதிருப்தி இருந்தால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து வன்முறை மூலம் என்னைத் துரத்தியடிக்க முற்பட வேண்டாம். இந்த வன்முறைகளுக்கெல்லாம் பயந்தவன் நான் அல்லன். சபையின் கெளரவத்தை – நாட்டின் நன்மதிப்பைக் கருதியே வன்முறையைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு நாடாளுமன்றக் குழு அறையில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்தார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

மஹிந்த அணியினரின் பங்காளிக் கட்சித் தலைவர்களைப் பார்த்தே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிப்பவர்களின் கருத்துகளுக்கு – தீர்மானங்களுக்கு நான் மட்டுமல்ல ஜனாதிபதியும் செவிசாய்க்கத்தான் வேண்டும்.

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும். அதைவிடுத்து சபையை வன்முறைக் களமாக மாற்ற எவரும் முற்பட வேண்டாம்.

நாடாளுமன்றம் நாட்டின் அதியுயர் சபை. நாட்டின் நற்பெயர் இந்தச் சபையில்தான் தங்கியுள்ளது. இதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். சபையில் வன்முறையில் ஈடுபட்டோர் – ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது உறுதி” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]