நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெற்றுக்கொள்ள இணக்கம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நேற்றுப் பகல் யாழ்ப்பாணத்தில் நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 21 பேரினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“குற்றம் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோரைப்
பதவியில் நீடிக்க விடுவேன்” என்று சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் அளித்த வாக்குறுதியையடுத்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து அகற்றுவது என்ற அதிரடி முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி நேற்றுமுன்தினம் அவசரமாக எடுத்திருந்தது. இதற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 21 பேர் ஆதரவு வழங்கியிருந்தனர். அவர்களில் 18 பேர் கையெழுத்திட்டு, முதல்வரை பதவி நீக்குமாறு கோரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றுமுன்தினம் இரவு அவசர அவசரமாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

ஊழல், மோசடி விசாரணையால் குற்றம்சாட்டப்பட்டிருந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசனையும், த.குருகுலராஜாவையும் அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் மாகாண சபையில் உரையாற்றும்போது கோரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை, குற்றம் நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீது புதிய விசாரணை நடைபெறும் எனவும், அதற்கு ஏதுவாக அவர்கள் இருவரும் ஒரு மாத காலத்துக்கு விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை விடுமுறையில் செல்லுமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்த விடயம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நம்பிக்கையில்லாப்

இதனால் நேற்றுமுன்தினம் மாலை அவசரமாகக் கூடிய தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையுடன் கலந்தாலோசித்திருந்தனர். தீவிரமான கலந்தாலோசனைகளை அடுத்து முதலமைச்சரைப் பதவி நீக்குமாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக ஆளுநரிடம் கோருவது என்ற அதிரடி முடிவு எட்டப்பட்டிருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 ஆம் ஆண்டு கட்சிக்கு வழங்கிய கடிதம் தூசி தட்டி எடுக்கப்பட்டு தற்போதைய நிலையில் அவரைப் பதவி நீக்குவதற்கான பலமிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விசேட அமர்வு முடிந்ததும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் அவசர கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றிருந்தது. இதில் வடக்கு முதலமைச்சரை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இதற்காகக் நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

“இதன் கீழ் கையெழுத்து வைத்திருக்கும் முறையாகத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் அமர்வு உறுப்பினர்களாகிய நாங்கள், தங்களுக்குத் தெரிவிப்பது யாதெனில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எம்முடைய நம்பிக்கையை – ஆதரவையும் இழந்து விட்டார் என்றும், அவர் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் – ஆதரவையும் இழந்துவிட்டார் என்பதை அறிவோம் என்றும், ஆகையினால் அவரைப் பதவியிலிருந்து அகற்றி புதிய முதலமைச்சர் நியமிக்குமாறு வேண்டுகின்றோம்” என்று தயாரிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன், இரவு 9 மணியளவில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர் ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர். ஆளுநருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது. நம்பிக்கையில்லாப் பிரேரணை அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் இதன்போது பதிலளித்திருந்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கட்சிக்கு வழங்கிய கடிதமும் தூசி தட்டி எடுக்கப்பட்டிருந்தது.

அதில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு அல்லது கோட்பாடுகளுக்கு மாறாகச் செயற்படும் பட்சத்தில் என்னை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் முழுமையான உரித்து உண்டென்றும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கேட்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவேன் என்றும் இத்தால் வாக்குறுதி அளிக்கின்றேன். அப்படியான தருணத்தில் இந்தக் கடிதத்தையே என்னுடைய பதவி விலகல் கடிதமாக உபயோகிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இத்தால் அனுமதி வழங்குகின்றேன்” – என்றுள்ளது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் நேற்றுமுன்தினம் இரவு முதல் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் மட்டத்தில் சூடுபிடித்திருந்தது. இதற்கு ஆதரவாக ஒரு பகுதியினரும், எதிராக இன்னொரு பகுதியினரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றுக் காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவசர பயணம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நேரில் முக்கிய பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சு இறுதியில்
சமரசப் பேச்சாக மாறியது.

“குற்றம் நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோரைப்
பதவியில் நீடிக்க விடுவேன்” என்று சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வாக்குறுதி அளித்தார்.

இதனை அடுத்து முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 21 பேரினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]