நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம்

நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அணி மும்பையை வீழ்த்தியிருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

களத்தில் மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தன. கடைசி ஓவரை புனே வீரர் உனத்கண்ட் வீசினார். முதல் பந்தில் பாண்டியா பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைட்டாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் வைட் என அறிவிக்கவில்லை.

நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் சர்மாவின் இந்தச் செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் எனத் தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்தப் போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.