நடிகைக்கு பாலியல் தொல்லை: நடிகர்-இயக்குனர் மீது புகார்

கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

இவரிடம் நடிகர் சுஜன், இயக்குனர் ஜலபதி ஆகியோர் கதாநாயகி வாய்ப்பு தருவதாக கூறி உள்ளனர். விஜயவாடா அடுத்த பீமாவரத்தில் நடத்தும் சினமா படப்பிடிப்புக்கு காரில் வரும்படியும், அந்த இயக்குனரிடம் பேசி கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினர். இதையடுத்து நடிகை தனது காரில் ஐதராபாத்தில் இருந்து பீமாவரத்துக்கு சென்றார். வழியில் நடிகர் சுஜன், இயக்குனர் ஜலபதி ஏறி கொண்டனர். காரை ஜலபதி ஓட்டி சென்றார்.

அப்போது நடிகையிடம் இருவரும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. நடிகை கூச்சலிட்டபடி அவர்களை திட்டி உள்ளார். இதனால் கார் திடீரென்று தாறுமாறாக ஓடி லாரி மீது மோதியது. இதில் நடிகை காயம் அடைந்தார். உடனே நடிகர் சுஜன் தப்பி விட்டார்.

இதுபற்றி நடிகை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நடிகையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து நடிகை பட்டமாலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், “காரில் நடிகரும், இயக்குனரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கற்பழிக்க முயன்றனர்” என்று கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விஜயவாடாவுக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் சுஜன், ஜலபதி இருவரும் காரில் வரும்படி கூறினர். காரில் சென்ற போது இருவரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை நான் கண்டித்தும் பின் இருக்கையில் தூக்கி போட்டனர். அப்போது லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

பின்னர் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டு போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று கூறினர். ஆனால் அதை நான் ஏற்காததால் மிரட்ட தொடங்கினர். போலீசில் புகார் செய்தால் அடுத்த படத்தில் நடிக்க விட மாட்டோம் என மிரட்டினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இதை இயக்குனர் ஜலபதி மறுத்து உள்ளார். “கார் விபத்தில் சிக்கியதால் எங்களிடம் நடிகை பணம் கேட்டார். நாங்கள் தர மறுத்ததால் பாலியல் புகார் கொடுத்து உள்ளார்” என்றார். போலீசார் வழக்குபதிவு செய்து இயக்குனர் ஜலபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் சுஜனை தேடி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]